2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

நானுஓயா காணி விவகாரம்; அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் சலசலப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், டி.சந்ரு

நானுஓயாவில், தனிநபர் ஒருவர் உரிமை கொண்டாடிவரும் பிரதேச சபைக் காணி விவகாரத்தால், இன்று (13) இடம்பெற்ற நுவரெலியா பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது, குழப்பம் ஏற்பட்டது.

மேற்படி அபிவிருத்திக் குழுக்கூட்டம், நுவரெலியா பிரதேசச் செயலாளர் பிரதீபிகா வீரசூரிய தலைமையில், நுவரெலியா பிரதேச செயலகத்தில், நேற்று காலை இடம்பெற்றது. இதன்போது, மேற்படி காணி விடயம் தொடர்பில், கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இது குறித்துக் கருத்துரைத்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் ரொஷான் குணவர்தன, மேற்படி காணி விவாகாரம் தொடர்பான முழுமையான அறிக்கையொன்றை, ஜனாதிபதி செயலகம் தன்னிடம் கோரியுள்ளதாக, சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

எனினும், மத்திய மாகாணசபை உறுப்பினரும் நுவரெலியா பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான பி.சக்திவேல் மற்றும் சபையின் தவிசாளார் வேலு யோகராஜ் ஆகியோர், இவ்விடயத்துக்கு மறுப்புத் தெரிவித்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவ்விருவரும், மேற்படி காணியானது, நுவரெலியா பிரதேச சபைக்கு உரித்தானதெனக் கூறியதோடு, அந்தக் காணியை உரிமைகோர அனுமதிக்கப் போவதில்லை என்றனர்.

காணியை அத்துமீறிக் கைப்பற்ற நினைக்கும் நபர், ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல அமைச்சர்கள், தனது சட்டைப்பைக்குள் இருப்பதாகக் கூறி, பொதுமக்களை ஏமாற்றி வருவதாகக் குற்றஞ்சாட்டியதோடு, இந்நபருக்கு ஆதரவுத் தெரிவித்து யார் வந்தாலும், காணியை மீண்டும் கையளிக்கப் போவதில்லை என்ற விடயத்தில், பிரதேச சபை உறுதியாக உள்ளதெனவும் கூறினர்.

நானுஓயா ஈஸ்டல் தோட்டத்தை அண்மித்து அமைந்துள்ள மேற்படி காணி, நுவரெலியா பிரதேச சபைக்கு உரித்தானதாகும். இந்தக் காணியை, தனி நபர் ஒருவர், கடந்த 1999ஆம் ஆண்டில், மூன்று வருடகால குத்தகைக்குப் பெற்றுக்கொண்டதோடு, அந்தக் காணியில், ஆடைத் தொழிற்சாலை ஒன்றையும் நடத்தி வந்தார்.

எனினும், மூன்று வருடகால முடிவின் பின்னர், குறித்த காணிக்கு குத்தகை செலுத்தாது, காணியை உரிமை கொண்டாடி வருகிறார்.

இதனையடுத்து, நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்கள் இணைந்து, குறித்த காணியை, மேற்படி நபரிடமிருந்து அண்மையில் பலவந்தமாகக் கைப்பற்றினர்.

இந்நிலையில், மீண்டும் அந்தக் காணியைக் கைப்பற்றுவதற்காக, மேற்படி நபர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X