2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

பகடிவதை விவகாரம்; 7 பேர் இடைநிறுத்தம்

Kogilavani   / 2017 ஜூலை 19 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

பத்தனை ஸ்ரீ பாத கல்வியியற் கல்லூரியில், முதலாமாண்டு ஆசிரிய மாணவர்களைப் பகடிவதைக்கு உட்படுத்தினர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட, இரண்டாம் ஆண்டு ஆசிரிய மாணவர்கள் 25 பேரில், ஏழுபேர், கல்வி நடவடிக்கைகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஏனைய 18 மாணவர்களும் தங்களுடைய பெற்றோருடன், 20 ஆம் திகதியன்று (நாளை), சமூகமளிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.   

பத்தனை ஸ்ரீ பாத கல்வியியற் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்கள் சிலரை, இரண்டாம் ஆண்டு ஆசிரிய மாணவர்கள், 2017ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் திகதியன்று, பகடி வதைக்கு உட்படுத்தினர் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.   

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில், விசாரணை நடத்துவதற்காக, ஒழுக்காற்று குழுவொன்று நியமிக்கப்பட்டது, அந்த ஒழுக்காற்றுக்குழு, இரண்டாம் ஆண்டு ஆசிரிய மாணவர்களின் புகைப்படங்களைக் காண்பித்து, விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.  

அந்த விசாரணைகளின் பின்னரே, மேற்கண்டவாறு அக்குழு, பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அதன்படி,   
1.இனம் காணப்பட்ட மாணவர்களில் 1 தொடக்கம் 7 வரை பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மாணவர்களை மீள் அறிவித்தல் வழங்கப்படும்வரை கல்லூரிக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதித்தும் அவர்கள் கல்வி கற்றல் நடவடிக்கைகளில் இருந்தும் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்கள்.   

கல்லூரி நிர்வாகம் குறிப்பிடுகின்ற தினத்தில் கல்லூரிக்கு, அவர்கள் தங்களுடைய பெற்றோருடன் சமூகமளிக்க வேண்டும். தொடர்ந்து நடைபெறுகின்ற விசாரணைகள் மூலம் அவர்கள், குற்றவாளிகளென நிரூபிக்கப்பட்டால் அவர்களின் கல்வி நடவடிக்கைகளை முற்றாகத் தடை செய்வதற்கும் ஒழுக்காற்று குழு தீர்மானித்துள்ளது.  

2.அடையாளம் காணப்பட்ட மாணவர்களில், 8 தொடக்கம் 25 வரையான மாணவர்கள் எதிர்வரும் 20.07.2017 அன்று அவர்களுடைய பெற்றோருடன் கல்லூரிக்கு சமூகமளிக்க வேண்டும். அவர்கள் அனைவரும் பெற்றோர் முன்னிலையில் எச்சரிக்கப்படுவார்கள்.

அதேநேரம், பகடிவதை தொடர்பாக நடைபெறுகின்ற விசாரணையின் மூலம் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்களின் கல்வி நடவடிக்கைகளை முற்றாக தடை செய்வதற்கும் ஒழுக்காற்று குழு தீர்மானித்திருக்கின்றது.  

இதேவேளை, இந்த ஒழுக்காற்றுக் குழுவின் தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் கல்வி இராஜங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.  

“இந்த ஒழக்காற்று குழுவின் தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளுக்கு, முழுமையான ஒத்துழைப்பை நான் வழங்குவேன். அதேநேரம், குற்றம் நிரூபிக்கப்படுகின்ற மாணவர்கள் தொடர்பாக எந்தவிதமான தயக்கமுமின்றி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நான் தயாராக இருக்கின்றேன்” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   

மேலும், “ஒரு சிலரின் நடவடிக்கை காரணமாகக் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைவதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது,   

“பத்தனை ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பாக எனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பபெற்றன. கல்லூரியின் பீடாதிபதியிடம், இது தொடர்பான விடயங்களைக் கேட்டறிந்து கொண்டு இது தொடர்பாக கல்லூரியின் ஒழுக்காற்று குழு மூலமாக தனக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும் படி பணித்திருந்தேன்”


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .