2026 மே 09, சனிக்கிழமை

’பயிற்சி பெற்ற ஆசிரிய உதவியாளர்கள் 215 பேருக்கு நியமனம் நிலைப்படுத்தி கொடுப்பனவு வழங்கப்படும்’

பா.திருஞானம்   / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாணத்தைச் சேர்ந்த, பயிற்சி பெற்ற ஆசிரிய உதவியாளர்கள் 215 பேருக்கான நியமனத்தை நிலைப்படுத்தி, அவர்களுக்கான கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய மாகாண ஆளுனர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தின் அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டம், இன்று (26),  நுவரெலியா மாவட்ட செயலகத்தின் அதிசய மண்டபத்தில், இணைப்புக் குழு  இணைத் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கே.கே.பியதாச தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, விஷேட பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், மலையத்தின் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர்களாகத் தெரிவு செய்து ஆசிரியர் பயிற்சிகளை முடித்துக் கொண்ட, பயிற்றப்பட்ட ஆசிரியர்களின் பதவிகளை நிலைப்படுத்தி, அவர்களுக்கான கொடுப்பனவை, மத்திய மாகாணம் வழங்காதமையால், ஆசிரியர்கள் பல இன்னல்களை எதிர்நோக்குவதாக எடுத்துரைத்தார்.

மேலும், ஏனைய சில மாகாணங்களில், அவர்களுக்கான கொடுப்பனவு வழங்கபடுவதாகவும் எனவே, இவர்களுக்கும் கூடிய விரைவில் அந்தக் கொடுப்பனவு வழங்கப்படல் வேண்டும் என்றும் கூறினார்.

இதையடுத்துக் கருத்துத் தெரிவித்த ஆளுநர், 215 ஆசிரியர் உதவியாளர்களின் விவரங்கள் கிடைத்துள்ளன என்றும் இவர்களில், மூன்று இரண்டுக்கு நிலைப்படுத்தத் தேவையான அனைத்து விவரங்களும் சரி செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இன்னும் ஓரிரு வாரங்களில், இவர்களுக்கான பதவியை நிலைபடுத்தி, மத்திய மாகாணம் மூலம் கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதேபோல், பயிற்சி பெற்றுக்கொண்டு இருப்பவர்களுக்கும் பயிற்சி பெற இருப்பவர்களுக்கும் இந்த நடைமுறை முன்னெடுக்கப்படும் என்றும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .