2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

பஸ் மோதியதில் சிறுவன் ஸ்தலத்திலேயே பலி; சாரதிக்கு விளக்கமறியல்

Editorial   / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா - வெஸ்ட்வடோ தோட்டத்தில், நேற்று(22)  மாலை இடம்பெற்ற விபத்தில், ஆறு வயது சிறுவனொருவன் ஸ்தலத்திலேயே பலியானார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதவான் பிரமோத ஜயசேகர முன்னிலையில், இன்று (23) ஆஜர்படுத்தப்பட்டபோது,  அவரை ஜனவரி மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு,  நீதவான் உத்தரவிட்டார்.

விபத்தில், வெஸ்வடோ தோட்ட பாடசாலையில், தரம் இரண்டில் கல்வி பயின்றுவந்த விஜயகுமார் பிரதீப் (வயது 6) என்ற சிறுவன் ஸ்தலத்திலேயே பலியானார்.

குறித்த சிறுவன், தனது வீட்டுக்குச் செல்வதற்காக, நுவரெலியா - கண்டி பிரதான வீதியைக் கடக்க முற்பட்டபோது, நுவரெலியாவிலிருந்து லபுக்கலையை நோக்கி சென்ற தனியார் பஸ்ஸில் மோதுண்டு ஸ்தலத்திலேயே பலியானார்.

பஸ்ஸானது வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சிறுவன் மீது மோதியதில், சிறுவன் பஸ்ஸின் சில்லில் சிக்குண்டு, சுமார் 15 மீற்றர் தூரம் வீசியெறிப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் எனத் தெரியவருகிறது.

இதனையடுத்து சாரதி தப்பியோடியுள்ளதுடன், நுவரெலியா பொலிஸில் சரணடைந்தார். இச்சம்பவம் காரணமாக, வெஸ்வடோ தோட்டத்தில், நேற்று முன்தினம் இரவு பதற்ற நிலை ஏற்பட்டதுடன், நுவரெலியா - கண்டி பிரதான வீதியின் போக்குவரத்தும், சுமார் இரண்டு மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ், நுவரெலியா மாநகர சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான சிவன்ஜோதி யோகராஜ், இ.தொ.காவின் தேசிய அமைப்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணி பி.இராஜதுரை ஆகியோர், மக்களுடன் கலந்துரையாடியதுடன், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சிறுவனின் சடலம், பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில், நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .