2026 மே 09, சனிக்கிழமை

dd

பாடசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்திக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 செப்டெம்பர் 26 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

நுவரெலியா கல்வி வலயத்துக்கு உட்பட்ட ஹோல்புறூக் கோட்டம் 03, நு/ ஆகுரோவா தமிழ் வித்தியாலத்தின் காணப்படும் குறைப்பாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கோரி, மாணவர்கள், பெற்றோர், நேற்று (26) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 500க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

பாடசாலையின் கட்டடமானது, 110 வருடங்கள் பழைமை வாய்ந்தது என்றும் 40 அடி நீளமும் 35 அகலமுடைய கட்டடத்தில், 98 மாணவர்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில், கல்வி கற்று வருவதாகவும் பெற்றோர் இதன்போது சுட்டிக்காட்டினர்.

மலசலகூடம், விளையாட்டு மைதானம் இன்மை, ஆங்கில ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை, மின்சார வசதி இன்மை காரணமாக மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இப்பாடசாலைக்கு புதிய கட்டடம் அமைத்துத் தருமாறு, அமைச்சர்களான பழனி திகாம்பரம், வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோருக்குக் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்த போதிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.

புதிய கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு தோட்ட நிர்வாகம் இரண்டு ஏக்கர் காணி வழங்கி நான்கு வருடங்கள் கடந்துள்ள போதிலும், இதுவரை புதிய கட்டடம் அமைக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.
இதனைக் கண்டித்தும் உடனடியாக சகல வசதிகளைக் கொண்ட கட்டடத்தை பாடசாலைக்கென அமைத்துத் தரமாறும் கோரியே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அக்கரப்பத்தனை - டயகம பிரதான வீதியை மறித்து மூன்று மணித்தியாலங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், நல்ல தீர்வு கிடைக்காவிட்டால் ஆர்பாட்டத்தை தொடர போவதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .