2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பாராளுமன்ற உறுப்பினரை தாக்க முற்படுவது ஏற்புடைய விடயமல்ல

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 06 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

" பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கருத்து வெளியிடும் சுதந்திரம் இருக்கின்றது. எனவே, அதற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெறுவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறான நடவடிக்கைகள் ஜனநாயக ஆட்சிக்கு விரோதமான செயற்பாடுகளாகும்." - என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

நேற்று (5)  நுவரெலியா – வலப்பனை நாராங்தலாவ, மைலகஸ்தென்ன ஸ்ரீ தர்மராஜராமய விகாரையின் விகாராதிபதியை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட பின், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

" தமது கருத்துகளை, நிலைப்பாடுகளை சுதந்திரமாக பாராளுமன்றத்துக்குள் வெளியிடும் உரிமை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்க வேண்டும். அந்த உரிமையை பயன்படுத்தி கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தாக்க முற்படுவது, அவருக்கு அச்சுறுத்தல் விடுப்பது என்பன ஏற்புடைய விடயமாக அமையாது. அவற்றை கண்டிக்க வேண்டும். அதேபோல பாராளுமன்றத்துக்குள் கடந்த இரு நாட்களாக இடம்பெற்ற சம்பவங்களானவை ஜனநாயக ஆட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

எதிரணி எம்.பிக்களுக்கு எதிரான அச்சுறுத்தலை ஏற்கமுடியாது. எனவேதான், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை சபை அமர்வுகளை புறக்கணிப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். அதற்கான நடவடிக்கை எவ்வாறு இடம்பெறும் என்பதை கட்சியின் பாராளுமன்றக்குழு தீர்மானிக்கும்.

குறிப்பாக பாராளுமன்றம் தொடர்பில் மக்களுக்கு தற்போது நன்மதிப்பு இல்லை. எனவே, பாராளுமன்றத்துக்குள் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை தடுத்து மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு சபாநாயகருக்கும், கட்சித் தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இருக்கின்றது. அவ்வாறு இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பாராளுமன்றமும் வன்முறைக்களமாக மாறும் அபாயம் உள்ளது.

நிவாரணங்கள் கிடைக்கும், சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் இந்த அரசுக்கு மக்கள் வாக்களித்தனர். அந்த எதிர்ப்பார்ப்பு ஒரு வருடத்துக்குள்ளேயே தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இன்று என்ன நடக்கின்றது? நாளாந்தம் பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன. மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் சூழலும் இல்லை." - என்றார்.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .