2026 மே 09, சனிக்கிழமை

dd

பிரதேச செயலகங்கள் அதிகரிப்பு; மகஜர் கையளிப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 05 , பி.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

 

நுவரெலியா மாவட்டத்தில் அதிகரிக்கப்படவுள்ள பிரதேச செயலகங்களை, பொருத்தமான இடங்களில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, பெருந்தோட் சமூக மாமன்றத்தின் உறுப்பினர்கள், நுவரெலியா மாவட்டச் செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமாரவிடம், 20ஆயிரம் கையொப்பங்கள் அடங்கிய மகஜர் ஒன்றை, நேற்று (05) கையளித்தனர்.

அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த காலங்களில், மக்கள் தொகைக்கு ஏற்ப, பிரதேச செயலகங்கள் இல்லாத காரணத்தால் அரச சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர் என்றும் அத்தோடு சேவைகளைப் பெற வேண்டுமானால், காலம், நேரம், தொழில் என்பவற்றை இழந்தும் அதிக பணத்தை செலவு செய்யவேண்டிய நிலைமை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மக்களின் சேவைகளை உடனடியாக வழங்கும் வகையில், பிரதேச செயலகங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு, நன்றி தெரிவிப்பதாக மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிய பிரதேச செயலகங்கள், தலவாக்கலை, நோர்வூட் பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், மற்றுமொரு செயலகத்தை, இராகலை பகுதியில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுத் தொடர்பாக பரிந்துரை செய்வதற்காக, பிரிடோ நிறுவனத்தின் வழிக்காட்டலில், முன்பள்ளி ஆசிரியர்கள், தோட்டங்களில் இயங்கும் சமூக அபிவிருத்திக் குழுக்கள் இணைந்து, 20ஆயிரம் கையொப்பங்களைத் திரட்டினர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்துரைத்த மாவட்டச் செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார, தற்போது பிரதேச செயலகங்களை அமைப்பதற்கான இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கான சகல நடவடிக்கைகளும் முடிவடைந்துள்ளன என்றும், மார்ச்மாதம் உத்தியோகபூர்வமாக பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் இராகலை பகுதியில், செயலகம் அமைக்குமாறு கோரிக்கை விடுப்பது சிறந்த விடயம் என்றும், அதுத் தொடர்பில் கவனஞ்செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .