2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

பிளவை ஏற்படுத்தாதீர்: அனுஷா கடும் எச்சரிக்கை

Editorial   / 2026 மார்ச் 29 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மலையக மக்களையோ அல்லது அந்தப் பிராந்தியத்தைச் சார்ந்தவர்களையோ இனம், மதம் மற்றும் பிரதேச ரீதியாகப் பாகுபடுத்தி, அவதூறாகச் சித்தரிக்கும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருவதை நாம் உற்று நோக்கி வருகிறோம். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என  புரட்சிகர மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய இலங்கை அரசியலில் வடகிழக்கு மற்றும் மலையகம் என அனைத்துச் சிறுபான்மைச் சமூகங்களும் ஒன்றிணைந்து, ஒற்றுமையுடன் கைகோர்க்க வேண்டியது அவசியமாகும். எமது கரங்கள் சமூகங்களை அவமானப்படுத்துவதற்காகவோ அல்லது எதிர்ப்பதற்காகவோ நீளக்கூடாது. பெரும்பாலான அரசியல் தலைமைகள் இதனை உணர்ந்திருந்தாலும், ஒரு சிலரின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த சமூகமும் பழி ஏற்க வேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்படுகிறது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட சில பிரதிநிதிகள், தங்களைச் சார்ந்த மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்யாமல், தமது அரசியல் தோல்விகளை மறைக்க இன, மத ரீதியான வன்மத்தைக் கக்குகின்றனர். சிறுபான்மை இனக்குழுக்களுக்கிடையே பிரிவினையைத் தூண்டிவிட்டு, அதில் குளிர் காய நினைக்கும் இத்தகைய ‘வங்குரோத்து அரசியலை’ நாம் முறியடிக்க வேண்டும்.

"மரியாதை மிக்க, பொறுப்புள்ள அரசியலாளர்களாகவும், ஒரு புரட்சிகர சக்தியாகவும் மக்களிடையே அமைதியையும் இன ஐக்கியத்தையும் பேண நாம் கடமைப்பட்டிருக்கிறோம். அந்தப் பொறுப்பை நாம் சரிவர நிறைவேற்றி வருகிறோம்."

மலையகத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான 'புரட்சிகர மக்கள் சக்தியின்' செயலாளர் நாயகமாகவும், ஒரு பட்டதாரி மலையகப் பெண்ணாகவும், எமது மக்களின் கௌரவத்தைச் சிதைக்கும் எந்தவொரு கருத்தையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மலையக மக்களுக்கு 200 ஆண்டுகளுக்கும் மேலான வீரமிக்க வரலாறு உண்டு.பல சவால்களைக் கடந்து கல்வி, கலை, கலாச்சாரம் என ஒவ்வொரு துறையிலும் எம் சமூகம் இன்று உயர்ந்து நிற்கிறது.

எனது தந்தை, பெருந்தலைவர் பெ. சந்திரசேகரன்  மலையக மக்களின் உரிமைகளுக்காக மட்டுமல்லாமல், வடக்கு - கிழக்கு மக்களின் நலன்களுக்காகவும் தன்னலமின்றி குரல் கொடுத்தவர். கிளிநொச்சி மாவட்ட மக்களின் அபிவிருத்திக்காக உழைக்கும் அளவுக்குப் பரந்த உள்ளமும், பண்பும் கொண்டவர் அவர். இவ்வாறான சமூக ஒற்றுமை முயற்சிகளே சிறுபான்மைச் சமூகங்களுக்கிடையில் பலமான உறவை உருவாக்கும்.

சிறுபான்மைச் சமூகங்களாகிய நாம் ஒன்றிணைந்து, எமது மக்களின் எதிர்கால உரிமைகளுக்காகவும் அபிவிருத்திக்காகவும் போராட வேண்டும். இனிவரும் காலங்களில் மலையக மக்களை அவமதிக்கும் விதமாக எவரேனும் செயல்பட்டால், அதனைப் புரட்சிகர மக்கள் சக்தி ஒருபோதும் அனுமதிக்காது. இது அத்தகைய சக்திகளுக்கு நாம் விடுக்கும் இறுதியான மற்றும் உறுதியான எச்சரிக்கையாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .