2026 மே 09, சனிக்கிழமை

’பீட்ரூ தோட்ட மக்களின் வாழ்க்கை சுருங்கிவிட்டது’

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ சண்முகநாதன்

காணி சுவீகரிப்பால் தோட்டங்கள் சுருங்கியதைப் போன்று, பீட்ரூ தோட்ட மக்களின் வாழ்க்கையும் சுருங்கிவிட்டது என, தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவரும் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான எம்.ராம் தெரிவித்தார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், சமூக அபிவிருத்தி அமைச்சினூடாக, நுவரெலியா பீட்ரூ தோட்டத்தில், 25 தனி வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில், நுவரெலியா மாநகர எல்லையை அண்மித்த பீட்ரூ தோட்டத்தில் இருந்த 260 ஹெக்டேயர் தேயிலைக் காணியை சுவீகரித்த அரசியல்வாதிகள், அங்கு,  பெரும்பான்மை மக்களைக் குடியேற்றி, பல்வேறு வேலைத் திட்டங்களுக்குப் பயன்படுத்தியுள்ளார்கள் என்று அவர் கூறினார்.

எனினும், இங்குள்ள தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில், எந்த விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் எதுவும் இடம்பெறவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

மாநகர எல்லையிலுள்ள இந்தத் தோட்டத்தில், அமைச்சர் திகாம்பரம் தலைமையில் 20.5 மில்லியன் ரூபாய் செலவில், 25 தனி வீடுகள் அமைக்கப்படவுள்ளன என்றும்  சாதாரண மக்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்த, சுக துக்கங்களில் பங்கு கொண்ட ஒருவராலேயே இத்தகைய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியும் என்றும் கூறினார்.

2015ஆம் ஆண்டு தமிழ் முற்போக்குக் கூட்டணி அமைக்கப்பட்டு மலையக மக்களின் வாக்குகளோடு, நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட பங்களிப்பைச் செய்திருந்தோம் என்றும் இரண்டு முறைக்கு மேலாக ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்ற பேராசை நிராசையாக மாற்றப்பட்டது என்றும் கூறிய அவர், அதன் விளைவாகத் தான் இன்று தோட்டங்களில் தனி வீட்டுத் திட்டங்கள் இடம்பெற்று, மக்கள் காணிக்கு உரித்துடையவர்களாக மாறி வருகின்றார்கள் என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .