2024 மே 03, வெள்ளிக்கிழமை

“பெயரை போட முயற்சிப்பது உகந்ததல்ல”

Janu   / 2024 பெப்ரவரி 12 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக விடயத்தில் பெயரை போட்டுக்கொள்ள வேண்டும் என்று தன்னிச்சையாக எவரேனும் செயல்படுவது உகந்ததல்ல என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணி தலைவருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், தோட்டத் தொழிலாளர்கள் மூவேளை சாப்பிட்டு ஓரளவு நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டுமென்றால்  நாள் ஒன்றுக்கு 2,000 ரூபாய்க்கு  அதிகமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான விளையாட்டு போட்டிகளில்  சாதனைகள் படைத்து  நாட்டுக்கு பெருமை தேடித்தந்த மலையக வீரர்கள், மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் நிகழ்வு, நுவரெலியாவில் அவரின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (11)  இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வின்போது நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், விலைவாசி உயர்வு, கடன் சுமை, வரிச்சுமை காரணமாக பல்வேறு துன்பங்கள், துயரங்களுக்கு முகங்கொடுத்து வரும் மக்கள் ஒருவேளை, அல்லது இருவேளை உணவை தவிர்த்து வாழும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளிவிடப்பட்டுள்ளனர்.

அத்துடன், மலையகத்தில் வாழ்வாதார தொழிலாகத் தேயிலை தொழிலை நம்பி வாழ்க்கை நடத்தி வரும் பெருந் தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று வழங்கும் நாள் சம்பளமான 1,000 ரூபாய், ஆறு வருடங்களாக பேசப்பட்டு, கடந்த இரண்டு வருடத்தில் கிடைத்த சம்பளமாகும் அதுவும் இம்மக்களுக்கு முறையாகக் கிடைப்பதில்லை என சுட்டிக்காட்டினார்.

இப்பொழுது உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களுக்கு விலைவாசி என்பவற்றின் அடிப்படையில், நாளொன்றுக்கு 2,000 ரூபாய்க்கு மேலதிகமான சம்பள உயர்வு இம்மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.

அதேநேரத்தில், இந்த சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் கட்சிகள் முடிவு எடுக்க வேண்டும்.  இந்த சம்பள இணக்கப்பாட்டுக்கு முடிவெடுக்க முடியாவிட்டால் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு சம்பளத்தை வாங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.

இதனைவிடுத்து, இந்த விடயத்தில் பெயரைப் போட்டுக்கொள்ள வேண்டும் என தன்னிச்சையாக எவரேனும் செயல்படுவது உகந்ததல்ல. அத்துடன், தொழிலாளர்களின் சம்பளம் உட்பட ஏனைய உரிமை, சலுகைகள் அடங்கிய கூட்டு ஒப்பந்தத்தை நாங்கள் எதிர்க்கவில்லை.மாறாக அதில், சில திருத்தங்களை கொண்டு வந்து சம்பளத்திற்கு அப்பால் தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பட வேண்டிய சலுகைகள்,வரப்பிரசாதங்கள் முறையாக உள்வாங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழியுறுத்துகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

கூட்டு ஒப்பந்தம் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு மலையக மக்கள் முன்னணிக்கு அழைப்பு கிடைத்தால் நிச்சயமாக அந்த பேச்சு வார்த்தையில் நாம் கலந்து கொள்வோம்.  அதேநேரத்தில்  கூட்டு ஒப்பந்தத்தில் மக்களுக்கு நன்மை கிடைக்குமாக இருந்தால் அதில் கலந்து கொள்வதில் எதுவித ஆட்சேபனையும் எமக்கு கிடையாது எனவும் உறுதியாக தெரிவித்தார்.

ஆ.ரமேஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .