2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

மலையக அத்தியாயம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 27 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

இலக்கியம் என்பது ஒரு சமூக அடையாளமாகும். எந்த ஒர் இலக்கியமும் மக்களையும்
வாழ்விலையும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் ஓர் ஆவணமாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிஸின் உப செயலாளரும் பிரஜாசக்தி அபிவிருத்தி செயற்திட்டத்தின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

சமூக ஆய்வாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று நிகழ்நிலை ஊடாக இடம்
பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் கல்வி வரலாற்றை நோக்குமிடத்து, உயர் தர கலைப்பிரிவில் மலையக இலக்கியங்கள் உட்புகுத்தப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

ஆனால் 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற புதிய பாடத்திட்ட மாற்றத்தின்போது மலையக இலக்கியங்கள் உயர் தர கலைப்பிரிவில் இருந்து அகற்றப்பட்டது, ஓர் இன ஒழிப்புக்கான அடித்தளமாகும். மாணவர்களுக்கு ஈழத்து இலக்கியத்தில் மலையக அத்தியாயம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

இதற்கு, மலையக இலக்கியங்கள் தர மற்றவை, இறந்த ஒருவரின் படைப்பு மட்டுமே பாடப்
பரப்புக்குள் உள்வாங்கப்பட வேண்டும் போன்ற காரணங்கள் முன்னிலைப் படுத்தப்படுகின்றமை மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.இலக்கியங்களின் தரத்தினை ஒரு தரப்பினரால் மட்டும் உறுதி செய்ய முடியாது.

ஏனெனில் அது ஒரு சமூகத்தின் வாழ்வியல் அடையாலம் ஆகும். இவ்வாறு ஒரு சமூகத்தின் அடையாளம் இல்லாது ஒழிக்கப்பட்டமைக்கு அப்போதைய ஆட்சியாளர்களின் கவனக் குறைவே காரணமாகும். இது எமது மக்களின் குரலினை ஒடுக்கும் ஒரு சம்பவமாகவே அமைகிறது.

அப்போதைய ஆட்சி காலத்தில் மொழிக்கான அமைச்சர் ஒருவரும் மற்றும் கல்விக்கான
இராஜாங்க அமைச்சர் ஒருவரும் இருந்தும் கூட இந்த தவறு இழைக்கப்பட்டமை பெரும்
வேதனைக்குரிய விடயமாகும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X