2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

மாடுகளுக்குப் பஞ்சம்

Kogilavani   / 2021 ஜனவரி 11 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

பெருந்தோட்டப் பகுதிகளில் மாடு வளர்ப்பானது நலிவடைந்து வருவதால், இம்முறை பட்டிப்பொங்கலைக் கொண்டாடுவதற்குக் கூட போதியளவு மாடுகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக, பெருந்தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். 

நுவரெலியா மாவட்டத்தில், கடந்த 2001ஆம் ஆண்டு முதல் கால்நடை வளர்ப்பு நலிவடைந்து வருவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.    

அத்துடன் கால்நடை வளர்ப்பாளர்களை போதியளவு ஊக்குவிக்காததன் காரணமாக, கால்நடைகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டுவதும் குறைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

மலையகத்துக்கு என கால்நடை வளர்ப்பு அமைச்சு இருந்தக் காலத்தில், பல பகுதிகளில் பால் பண்ணைகள் அமைக்கப்பட்டதுடன் கால்நடை வளர்ப்பும் ஊக்குவிக்கப்பட்டது. 

அம்பேவெல, கொட்டகலை, ரொசிட்டா, அக்கரப்பத்தனை, போபத்தலாவ ஆகிய பகுதிகளில் பால் பண்ணைகள் அமைக்கப்பட்டதுடன், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து மாடுகளும் இறக்குமதி செய்யப்பட்டு, கால்நடை வளர்ப்பாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன.

அத்துடன், தோட்டப் பகுதிகளில் மாடு   வளர்ப்பாளர்களை ஊக்குவிக்கவும் அந்தந்த  பிரதேசங்களில் காணப்படும் கால்நடை வளர்ப்பு  சுகாதாரத் திணைக்களங்களினூடாக, மாடுகளை கடன் அடிப்படையில் வழங்கும் திட்டங்களும்  முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், கால்நடை அமைச்சு கைமாறியப் பின்பு, மலையகத்தில் கால்நடை வளர்ப்பு ஊக்குவிக்கப்படவில்லை என்று, கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

மாகாண சபைகளிலுள்ள கால்நடை அபிவிருத்தி அமைச்சினூடாக, மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில், தெருந்தோட்டப் பகுதி கால்நடை வளர்ப்பாளர்களுக்கு, மாடுகளும் தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டன என்றும் எனினும் தற்போது அவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, கால்நடை வளர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, கால்நடை வளர்ப்பாளர்களை ஊக்குவிக்கவும்  தோட்டப் பகுதிகளில் புற்கள் வளர்க்கும் தரிசு நிலங்களை வழங்குவதிலும் தொடர்ச்சியாக ஏற்பட்ட பின்னடைவுகள் காரணமாக, கால்நடைகளை வளர்க்க முடியாது அவற்றை விற்பனை செய்யும் நிலைக்குத் தாம் தள்ளப்பட்டதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான காரணங்களால், பெருந்தோட்டப் பகுதிகளில் கால்நடை வளர்ப்புப் பின்னடைந்துள்ளது. 

நுவரெலியா மாவட்டத்திலுள்ள தோட்டங்களில், ஓர், இருவர் மட்டுமே கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே,  தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சு இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X