2026 ஜனவரி 21, புதன்கிழமை

’முறுகல் தொடர்ந்தால் மலையகத்தை முடக்குவோம்?

Kogilavani   / 2021 மே 06 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

சம்பள அதிகரிப்பு என்ற பெயரில் தொழிலாளர்களின் தொழில் சுமை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார், தொழிலாளர்களுக்கும் கம்பனிகளுக்கும் இடையில் முறுகல் நிலைத் தொடர்ந்தால், மலையகத்தை முடக்கிப் பாரியப் போராட்டமொன்றுக்குச் செல்ல நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நிலைமைகள் தொடர்பான பாராளுமன்றத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், நாட்டின் தற்போதைய நிலை படுமோசகவுள்ளதாகவும் ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் தெரிவித்த அவர், கொரோனா வைரஸைக் காரணங்காட்டி அரசாங்கம் நழுவிச் செல்ல முடியாதெனவும் தெரிவித்தார்.

கொரோனா தொற்றாளர்களால் வைத்தியசாலைகள் நிரம்பி வழிவதாகவும் தொற்றாளர்களின் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஒட்சீசன், படுக்கைகள் உள்ளிட்ட சுகாதார உபகரணங்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவித்த அவர், அவசர சிகிச்சைப் பிரிவில் பயிற்றுவிக்கப்பட்டத் தாதியர்களுக்கும் வைத்தியசாலைகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், இதனால், அனுபவம் பெற்ற தாதியர் ஒருவர் நாளொன்றுக்கு 3 மடங்குப் பணியாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனரெனவும் தெரிவித்தார்.

நுவரெலியா வசந்த காலத்தைப் பார்வையிட வெளிமாவட்டங்களில் இருந்து பலர் வந்திருப்பதால், அங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் இதுத் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் தெரிவித்த அவர், சம்பள அதிகரிப்பு விடயத்திலும் நூதனமாகத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றார்.

சம்பள உயர்வு என்ற பெயரில் தொழில்சுமை அதிகரித்துள்ளதாகவும் கம்பனிகளின் அடக்குமுறை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்த அவர், கம்பனிகளுக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு முறுகல் நிலை நீடித்து வருவதாகவும் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X