2026 ஜனவரி 21, புதன்கிழமை

நிர்வாணமாக குளிரில் சித்ரவதை

Editorial   / 2026 ஜனவரி 21 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

ஈரானில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் அரசு கடும் குளிரில் அவர்களை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்வதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

ஈரானில் தற்போது உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் ஈரான் சிக்கி உள்ளது. அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

‛முல்லா கண்டிப்பாக போ' என்ற கோஷத்துடன் பொதுமக்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இளம்பெண்கள் அயதுல்லா அலி கமனேியின் போட்டோக்களை எரித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஈரானின் பரம எதிரிகளாக உள்ள அமெரிக்காவும், இஸ்ரேலும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா, இஸ்ரேல் இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. அதேவேளையில் போராட்டத்தை கட்டுப்படுத்த ஈரான் தொடர்ந்து முயன்று வருகிறது. தற்போது வரை 26 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பொதுமக்கள், பாதுகாவலர்கள் என்று மொத்தம் 5,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் கூட போராட்டம் மட்டும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இந்நிலையில் தான் கைது செய்யப்படுவோருக்கு சிறையில் துன்புறுத்தல் கொடுக்கப்படுவதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சிறையில் இருப்போரை நிர்வாணப்படுத்தப்பட்டு கடும் குளிரில் சித்ரவதை செய்யப்படுகின்றனர். அதேபோல் சிலரின் உடலில் ஊசிகள் செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது. அந்த ஊசி எத்தகையது? என்பது தெரியவில்லை.

இதுதொடர்பாக பிரிட்டனை சேர்ந்த டெய்லி எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‛‛ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டு வருவோர் சிறையில் சித்ரவதை செய்யப்படுகின்றனர். கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு உறைபனி போன்ற குளிர் சூழலில் துன்புறுத்தப்படுகின்றனர். நிர்வாணப்படுத்தப்படும் கைதிகளின் மீது சிறை அதிகாரிகள் குழாய் மூலமாக குளிர்ந்த தண்ணீரை பீய்ச்சி அடிக்கின்றனர். பல கைதிகளுக்கு திடீரென ஊசிகள் செலுத்தப்படுகிறது'' என கூறப்பட்டுள்ளது.

மேலும் ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டு கொல்லப்படும் பொதுமக்கள் சுட்டு கொல்லப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக ஈரானில் இருந்து வெளியான போட்டோ, வீடியோக்களை அவர்கள் சாட்சியாக வைத்து இந்த குற்றச்சாட்டை முன்வைத்த வருகின்றனர். மேலும் அங்கு அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக போராடும் நபர்களுக்கு இழைக்கப்படும் சித்ரவதை பற்றிய ஆடியோக்களையும் அவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கொத்து கொத்தாக கொல்லப்பட்டுள்ள போராட்டக்காரர்களின் உடல்கள் கருப்பு பைகளில் சுற்றப்பட்டு தரையில் வீசப்பட்டுள்ளது. மேலும் உடல்கள் தள்ளுவண்டியில் வைத்து தள்ளி செல்வது, இறந்தவர்களின் உடல்களை அவர்களின் உறவினர்கள் தேடுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X