எஸ்.சதிஸ், எம்.கிருஷ்ணா
மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் நோர்வூட் - வெஞ்சர் தோட்ட வைத்தியசாலைக்கு என, நிரந்தர வைத்தியர் ஒருவர் இன்மையால், தோட்ட மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
90 வருடங்கள் பழமைவாய்ந்த இந்த வைத்தியசாலையில் பல்வேறு வசதிகள் காணப்பட்டாலும், நிரந்தர வைத்தியர் ஒருவர் இதுவரை நியமிக்கப்படவில்லை என்றும் தோட்ட மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எட்டு மாதங்களுக்கு முன்பாக, வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டார் என்றும் எனினும், அவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்ததை அடுத்து, இதுவரை வைத்தியர் நியமிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
வெஞ்சர், அப்பலோரன்ஸ், லோவலோரன்ஸ், 50 ஏக்கர் ஆகிய நான்கு தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் இந்த வைத்தியசாலையையே நம்பியுள்ளனர் என்றும், அவசர நிலைமைகளில்போது பல மைல் தொலைவிலுள்ள வைத்தியசாலைக்கே செல்ல வேண்டியுள்ளதாகவும், பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி வைத்தியசாலைக்கு அருகிலேயே பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பிசிஆர் பரிசோதனைகள் முடிந்தவுடன் வைத்தியசாலை வளாகம் தொற்று நீக்கப்படுவது இல்லை என்றும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அத்துடன், தோட்டச் சாரதியின் வீட்டுக்கு வரும் உறவினர்கள், தோட்ட வைத்தியசாலையையே தங்குமிடமாக பயன்படுத்துகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியர் ஒருவர் இல்லாமையால், இவ்வாறானச் சம்பவங்கள் இந்த இடம்பெறுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள தோட்ட மக்கள், வைத்தியரை நியமிக்குமாறு, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்குக் கொண்டுவந்த போதிலும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொட்பில், வெஞ்சர் தோட்ட முகாமையாளர் இமேஸ் போகவத்தவை தொடர்புகொண்டு கேட்டபோது, வைத்தியரை நியமிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.