2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வட, கிழக்கில் விரட்டப்பட்ட அனைவரையும் மீள்குடியேற்றவும்

Princiya Dixci   / 2015 நவம்பர் 08 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து விரட்டப்பட்டு நாட்டின் பல பகுதிகளிலும் அகதிகளாக வாழ்ந்து வரும் அனைத்து மக்களையும் சகல வசதிகளுடன் உடனடியாக மீளக்குடியேற்ற வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும்  நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கண்டி, பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸின்  26ஆவது பேராளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

பேராளர் மாநாட்டுக்கு முதல்நாள் நடைபெற்ற கட்சியின் உயர்பீட அங்கத்தவர்கள் கூட்டத்தில் நடப்பு வருடத்துக்கான தேசிய தலைவராகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

அமைச்சர் ரவூப் ஹக்கீம் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கை அரசியல் பரப்பில் தற்போதைய காலகட்டம் மிக முக்கியதொரு காலகட்டமாகும். ஏனெனில், நல்லாட்சியை உருவாக்கி விட்டோம். அதன் பங்காளர்களாக நாமும் இருக்கின்றோம். ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விட்டோம். எல்லாம் சரியாகிவிட்டது என்று நாம் அமைதி அடைய முடியாது. ஏனெனில், நடைமுறைப் பிரச்சினைகள் அனைத்தும் துடைத்து எறியப்பட்டு விட்டதாக நாம் தீர்மானிக்க முடியாது.

சுமார் 30 வருடங்கள் இடம்பெற்ற யுத்தம் முடிவடைந்த பின்னர், மக்களுக்கு இடையே சகவாழ்வு ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்னும் அது ஏற்படவில்லை. யுத்தம் முடிவடைந்த போதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து இடம்பெயர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் அகதிகளாக இன்னல்களுக்கு மத்தியில் வாழும் தமிழ், முஸ்லிம் அனைத்து மக்களையும் உடனடியாக அனைத்து வசதிகளுடன் மீளக் குடியேற்ற வேண்டும்.

தீமை நடப்பது நின்றுவிட்ட போதும் இன்னும் நல்லது நடக்க ஆரம்பிக்கவில்லேயே என்று என்னிடம் தூதுவர் ஒருவர் கூறினார். அதில் பாரிய உண்மை இருப்பது எங்களுக்கு விளங்குகின்றது. ஆட்சி மாற்றம்  ஏற்பட்டு சுமார் ஒரு வருட காலமான போதும் இன்னும் பழைய யுகத்தில்தான் உள்ளோம் என்ற மாயை எம்மை விட்டு முற்றாக இன்னும் அகன்றதாக இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கும் விடயம் தொடர்பாக மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க எம்மால் முடியாதுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .