2026 மே 09, சனிக்கிழமை

வனவிலங்குகளின் உயிருக்கு அச்சுறுத்தல்; ’மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளவும்’

Editorial   / 2020 பெப்ரவரி 11 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

 

பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள பிரதான காடுகள், தேயிலைத் தோட்டங்களுக்கு அருகிலுள்ள மானாப்புற்றறைகளுக்குத் தீ வைக்கப்படுவதால், வனவிலங்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் சங்கத்தின் தலைவரும் நல்லதண்ணி வனவிலங்குத் திணைக்களத்தின் வனவிலங்கு பாதுகாவலருமான பிரஹாஷ் கருணாதிலக்க தெரிவித்தார்.

தற்போது நிலவிவரும் வரட்சியான வானிலையைக் கருத்திற்கொண்டு, வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கில் விஷமிகள் செயற்பட்டு வருகின்றனர் என்றுச் சாடிய அவர், இவ்விடயத்தில் ஒவ்வொருவரும் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்வது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இவ்விடயம் தொடர்பில், ஊடகங்களுக்கு விசேட கருத்தொன்றை வெளியிட்டுள்ள  அவர், மத்திய மலைநாட்டில், தற்போது கடும் வரட்சியான வானிலை நிலவி வருவதாகவும் விஷமிகள் இதனைத் தமக்குச் சாதமாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

காடுகளுக்குத் தீமூட்டப்படுவதால், பாலூட்டிகள்,  ஊர்வன, பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள், தேயிலைத் தோட்டங்களை நோக்கிப் படையெடுக்கின்றன என்றும் தேயிலைத் தோட்டங்களை நோக்கி வரும் அவற்றை, மிக சுலபமாக வேட்டையாடுவதே, விஷமிகளின் நோக்கம் என்றும் சாடினார்.

காடுகளுக்கு தீ மூட்டப்படுவதால்,  இலங்கைக்கே உரித்தான மலைச் சிறுத்தை, சிறுத்தை என்பவை ஆபத்தில் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

தனது வாழ்விடத்தை விட்டு தேயிலைத் தோட்டமொன்றுக்கு வந்த மான் குட்டியொன்றை, நல்லுள்ளம் கொண்ட நபரொருவர் வேட்டையர்களின் கண்களுக்குப்படுவதற்கு முன்பாக அதனை மீட்டு, பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தச் சம்பவமொன்றும், நேற்று முன்தினம் (10) இடம்பெற்றதாகச் சுட்டிக்காட்டிய அவர், வாழ்விடங்களை விட்டு தேயிலைத் தோட்டங்களுக்குள் நுழையும் காட்டு விலங்குகள், இவ்வாறு உயிருடன் மீட்கப்படுவது அரிதான செயலென்றும் தெரிவித்தார்.

வனவிலங்குகள் விடயத்தில்,  மனிதாபிமானத்துடன் நடந்துகொள்வது அவசியம் என்று வலியுறுத்தியுள்ள அவர், காடுகளுக்குத் தீ மூட்டுவோர், விலங்குகளை வேட்டையாடுவோர் குறித்து, பொதுமக்கள் தங்களது பிரதேசத்துக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்குத் தகவல் வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .