2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வரவு- செலவு திட்டத்தில் கல்வி அபிவிருத்திக்காக கூடுதல் நிதி

Sudharshini   / 2015 டிசெம்பர் 05 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

நல்லாட்சி அரசாங்கத்தின் கன்னி வரவு- செலவுத் திட்டத்தின் ஊடாக வறிய மக்களின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட பணத்திலிருந்து ஒரு சதத்தையேனும் அரசாங்கம் வீண்விரயம் செய்யாது என தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

ஹாரிஸ்பத்துவ, பூஜாபிட்டிய மற்றும் அக்குறணை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் நேற்று வெள்ளிக்கிழமை (04) இடம்பெற்ற வைபவங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

'கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற தேர்தலின் போது மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கூடுதலான ஆசனங்களை பெற்றுத் தந்தனர். இருந்த போதும் அரசை அமைப்பதற்கு மேலும் சில ஆசனங்கள் தேவைப்பட்டது. இதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந்து சிலரை சேர்த்துக் கொண்டு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது.

இத்தேசிய அரசாங்கத்தின் முதலாவது வரவு -செலவுத் திட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வரவு செலவுத் திட்டம் மூலம் வரலாற்றில் அதி கூடிய பணத்தை கல்விக்காக ஒதுக்கி உள்ளோம். இது நல்லாட்சிக்கு வாக்களித்த மக்கள் பெற்ற பாரிய வெற்றி ஆகும்.

2016 ஆம் ஆண்டில் கல்வித்துறையில் சில மாற்றங்களை கொண்டு வர உள்ளோம். இது தற்போதைய  கல்விக் கொள்கையை மாற்றி அமைபப்தற்கு அல்ல. கல்வித் துறையில் நிலவி வரும் தவறுகளை நிவர்த்தி செய்வதற்காகவே ஆகும். அடுத்த ஆண்டு முடிவுக்கு முன் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் மலசல கூட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.

மேலும், சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுவோரின் நலன் கருதி, இரத்தம் சுத்திகரிப்புக்காக 1000 நிலையங்களை அமைக்கவும் மின்னேரியா பிரதேசத்தில் சிறுநீரக நோயாளிகளுக்காக பூரண வசதிகளை கொண்ட வைத்தியசாலை ஒன்றை அமைக்கவும்  யாழ்ப்பாணம் கண்டி, மாத்தறை ஆகிய பகுதிகளில் புற்றுநோய் வைத்தியசாலைகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எமது அரசாங்கத்தின் மற்றுமொறு பாரிய திட்டமான வீடமைப்புத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் 1000 வீடுகளை அமைக்க திட்டமிடப்பட்;டுள்ளது' என அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .