2026 மே 09, சனிக்கிழமை

dd

‘வாக்குறுதிப்படி ரூ. 1,000 கிடைக்கும்’

எஸ்.சதிஸ்   / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாக்குறுதி அளிக்கப்பட்டதைப் போன்று, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும் என, பெருந்தோட்டத்துறை, விவசாய ஏற்றுமதி அமைச்சர் ​ரமேஸ் பத்திரண தெரிவித்தார். 

ஹட்டன் - வெளிஓயா மேற்பிரிவு தோட்டத்தில், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன், 50 தனி வீட்டுத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா, இன்று (16) நடைபெற்றது.  

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

மலையக மக்களுக்கு வழங்கப்படவேண்டிய அனைத்து உரிமைகளையும் வழங்குவதற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் தலைமையிலான அரசாங்கம், அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்றார்.   

இந்த அரசாங்கம் பதவியேற்ற நாளிலிருந்து, இரவு - பகல் பாராது, மலையக மக்களுக்காக அமைச்சர் தொண்டமான் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றார் என்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடினார் என்றும், இதற்கு எமது அரசாங்கம் சாதகமான பதிலை வழங்கியது என்றும் அவர் கூறினார். 

அந்த வகையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் கிடைக்கும் என்றும் அத்துடன், கிடைக்கவேண்டிய அனைத்து உரிமைகளையும் வழங்குவதற்கு இந்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும், அமைச்சர் கூறினார். 

நாட்டின் தேசிய பொருளாதாரத்தைச் சிறந்த இடத்துக்குக் கொண்டுவருவதற்கு கடந்த 100 வருடங்களாக, பெருந்தோட்ட மக்கள் பெரும் பங்களிப்பை வழங்கிவந்துள்ளனர் என்று கூறிய அவர், தேயிலைப் பொருளாதாரம் மூலம், நாட்டுக்கு வருடாந்தம் 231 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும் அடுத்த ஐந்தாண்டுக் காலப்பகுதியில், தொழிலாளர்களின் பங்களிப்புடன் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.  

இலாபம் இரட்டிப்பாகும் பட்சத்தில், அதன் நன்மையைக் கம்பனிகள் மட்டும் அனுபவிக்க முடியாது என்றும் கடுமையாக உழைக்கும் தொழிலாளர்களுக்கே அதன் பிரதிபலன்கள் சென்றடைய வேண்டும் என்றும், எனவே, இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு இணைந்துச் செயற்படுவோம் என்று, அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.    

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .