2026 மே 09, சனிக்கிழமை

வேலையற்ற பட்டதாரிகளுக்கு இந்துக் கலாசார உத்தியோக்கத்தர் நியமனம்

Editorial   / 2019 செப்டெம்பர் 13 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாணத்தில் அதிக எண்ணிக்கையில் வாழும் இந்து மக்களினது  சமய, சமூக விழுமியங்களைக் கவனத்திற்கொண்டு, உடன் அமுலுக்கு வரும் வகையில், இந்துக் கலாசார உத்தியோகத்தர்களை நியமிப்பது அவசியம் என்று வலியுறுத்தியுள்ள ஊவா மாகாண சபையின் உறுப்பினர் வேலாயுதம் உருத்திரதீபன், மாகாணத்திலுள்ள பட்டதாரிகளைக் கொண்டு இந்த நியமனத்தை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊவா மாகாண சபையின் மாதாந்த அமர்வு, மாகாண சபையின் தலைவர்  ஏ.எம்.புத்ததாச தலைமையில், நேற்று (12) நடைபெற்றது. சபை அமர்வில் கலந்துகொண்ட உறுப்பினர், மேற்படி விடயம் தொடர்பிலான பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றும்போதே, இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர்,

பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில், இந்து மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்றும் எனினும் இந்துக் கலாசார உத்தியோகத்தர்கள் இல்லாத காரணத்தால், கோவில்களைப் பதிவு செய்தல்,  அறநெறி உள்ளிட்ட ஆன்மிக நிகழ்வுகளுக்கு அவர்களை உள்வாங்குவதோ  உள்ளீர்ப்பதோ, பெருஞ்சிரமமாக உள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதுடன், ஊவா மாகாண சபையின் கலாசார அமைச்சினாலும் இந்து சமய பதிவு இல்லாமலிருப்பது கவலைக்குறியது என்றும் தெரிவித்தார்.  

சமூக சீர்கேடுகளைத் தவிர்த்து நல்வழிபடுத்தவும் மத்திய அரசின் இந்து கலாசார அமைச்சினது உதவிகளை விரிவுபடுத்தவும், இந்துக் கலாசார உத்தியோகத்தர்களின் நியமனம் அவசியமாகின்றது என்றும், எனினும் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலான காலம், இந்துக் கலாசார உத்தியோகத்தர் ஒருவர் இல்லாமை வருத்தத்துக்கு உரியதாகும் என்றும் தெரிவித்தார்.

எனவே இந்து சமய கலாசார விழுமியங்களை முன்னெடுக்கவும் இந்துக் கோவில்களை உரியமுறையில் பதிவுசெய்து பராமரிக்கவும் அறநெறி பாடசாலைகளை மேலோங்கச் செய்யவும், கோவிலின் நிதி நிலமைகளைக் கண்காணிக்கவும், கலாசார அமைச்சினூடன தொடர்புகளை விரிவுப்படுத்தவும்,  ஊவா மாகாணத்திலுள்ள வேலையற்ற இந்துசமய, தமிழ்  பட்டதாரிகளுக்கு இந்து கலாசார உத்தியோகத்தர்களுக்கான நியமனத்தை வழங்குவதற்கு சபையின் மூலம் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்றும் அவர்  கேட்டுக்கொண்டார்.

இந்தப் பிரேரணை எவ்வித எதிர்ப்புமின்றி சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .