2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ஹட்டன் நகரை மரபுரிமை நகரமாக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும்

Editorial   / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்

ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் முதலாவது சபை அமர்வு, இன்று (26), நகர சபை தலைவர் சடையன் பாலசந்திரன் தலைமையில் கூடியதில், புதிதாக சபைக்காக தெரிவு செய்யப்பட்ட தலைவர் உட்பட 16 உறுப்பினர்கள் இந்த முதல் சபை அமர்வில் கலந்து கொண்டனர்.

இதன்போது, ஹட்டன் நகர சபையின் முன்னாள் தலைவர், காலஞ்சென்ற அபுசாலிக்கு, சபையினரால் 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவரின் சேவைகள் தொடர்பில் பாராட்டப்பட்டு, உரையாடலும் செய்யப்பட்டது.

அதன்பின், ஹட்டன் நகர சபை ஊடாக, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்களுக்கான குழுக்கள் நியமிக்கப்பட்டதுடன், சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் உரைகளும் இடம்பெற்றன. இதன்போது, சபையின் தலைவர், ஹட்டன் நகரில் எதிர்கால வேலை திட்டம் தொடர்பிலான கருத்துகளை முன்வைத்தார்.

அவர் தனது கருத்தில், ஹட்டன் நகரத்தில், போதை பொருட்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை, அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்போவதாக தெரிவித்ததோடு, ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில், விளையாட்டுகள் தவிர்ந்த ஏனைய அரசியல் நடவடிக்கைகளுக்கு இம் மைதானத்தை பாவிப்பதற்கான அனுமதியை மறுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஹட்டன் நகரில் பாரிய பிரச்சினையாக, கடந்த காலங்களில் இடம்பெற்று வந்த குப்பை பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், இடம் ஒன்றை தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்த அவர், ஹட்டன் நகரை ஒரு மரபுரிமை நகரமாக மாற்றியமைப்பதோடு, நுவரெலியா மாநகர சபை ஊடாக முன்னெடுக்கப்படும் வசந்த கால நிகழ்வுகள் போன்று, எதிர்காலத்தில் ஹட்டனிலும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஹட்டன் நகரை அனைவரும் நேசிக்கக் கூடிய புதிய நகராக மாற்றியமைப்பதற்கான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, ஹட்டன் நகர சபையை எதிர்காலத்தில் மாநகர சபையாக ஆக்குவதில் இலக்காக கொண்டே, அபிவிருத்தி பணிகள் அனைத்தும், சபையின் அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X