2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

1000 பாடசாலை அபிவிருத்தி திட்டம் எமக்கு கிடைத்த வரபிரசாதம்: பிரபா

Kanagaraj   / 2013 நவம்பர் 08 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தில் எந்தவொரு தமிழ் பாடசாலையும் உள்வாங்காத நிலையில் அதனை கவனத்தில் கொண்டு கொழும்பு தெமட்டகொட விபுலானந்தா மகாவித்தியாலயத்தை பெரும் சிரமத்தின் மத்தியில் உள்வாங்கியிருந்தோம் என்று தெரிவித்த கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் இந்த 1000 பாடசாலை அபிவிருத்தி திட்டம் எமக்கு கிடைத்த வரபிரசாதமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
இத்திட்டத்தினால் கிடைக்கவிருக்கும் வரப்பிரசாதங்களை பெற்றோர்கள தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொரளை தனிநாயகம் தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்ற பெற்றோர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 
ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தில் முதலாவது கட்டத்தில் கொழும்பு மாவட்டத்தில் 17 சிங்கள பாடசாலைகளும் 3 முஸ்லிம் பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்பட்ட வேலையில் ஒரு சிங்கள பாடசாலையின் பெற்றோர்களின் எதிர்ப்பின் காரணமாக அதற்கு பதிலாக அவிசாவளை சி.சி.டி புவக்பிட்டிய தமிழ் வித்தியாலயமும் அபிவிருத்தி செய்யப்பட்டு இன்று சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இரண்டாவது அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தெமட்டகொட விபுலானந்தா மகா வித்தியாலயமும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்காக விபுலானந்தா தமிழ் வித்தியாலயத்தின் பழைய கட்டிடம் ஒன்றையும் நாம் உடைத்து அகற்றியுள்ளோம். இவ்விடத்தில் புதிய இரண்டுமாடி கட்டிடம் கட்டுவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இப்பாடசாலைக்கு முதலாம் ஆண்டுக்கு விண்ணப்பத்திருந்த பிள்ளைகள் தனிநாயகம் வித்தியாலயத்திற்கு மாற்றப்படவுள்ளனர். அதே போல் தனிநாயகம் வித்தியாலயத்திலுள்ள 6 ஆம் வகுப்பிற்கு மேல் உள்ள மாணவர்களை விபுலானந்தா வித்தியாலயத்திற்கு மாற்றப்படுவதற்கான வேலைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் முதலாம் ஆண்டுக்கு விண்ணப்பித்திருந்த பிள்ளைகளின் பெற்றோர்கள் பல சந்தேகங்களை தெரிவித்திருந்தார்கள்.

குறிப்பாக தனிநாயகம் மகாவித்தியாலயம் கிறிஸ்தவ பாடசாலை என்பதனால் இந்து பிள்ளைகளும் கிறிஸ்தவ முறைப்படி நடந்து கொள்ள வேண்டி வருவதனால் தமது மதச் சுதந்திரம் பாதிக்கப்படும் என்ற சந்தேகம் பெற்றோர்களிடம் இருக்கின்றது. இதற்கு ஒரு போதும் நான் இடங்கொடுக்க மாட்டேன்.

இந்து முறைப்படி மாணவர்கள் செயல்படுவதற்கான ஏற்பாடுகளை இக்கல்லூரி வளாகத்தில் நாம் செய்து கொடுப்போம். அது மட்டுமின்றி பாடசாலைக்கான போக்குவரத்து பிரச்சினைக்கும் விசேட திட்டத்தினை ஏற்படுத்துவோம். இப்பாடசாலையின் பெயரிலே விபுலானந்தா ஆரம்பப் பிரிவு என்ற பதத்தினையும் சேர்ப்பதற்கு முடிவு செய்துள்ளோம்.

இத்திட்டத்தின் மூலமாக விபுலானந்தா மகா வித்தியாலயத்தின் புதிய இரண்டு மாடி கட்டிடம் கட்டப்பட்டு உயர்தர மாணவர்களுக்கான விஞ்ஞான கூடம் போன்ற பல நவீன தொழில்நுட்ப துறைக்கான வசதிகள் நிர்மானிக்கப்படவுள்ளது. அதே போல் இப்பாடசாலைக்கான புதிய கட்டிடமும் கட்டப்படும்.

ஆகவே, இத்திட்டத்தின் மூலம் பிற இனத்தவர்கள் பெற்றுக்கொண்ட வரப்பிரசாதங்களை நாமும் பெற்றுக் கொள்வதற்கு பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக்கூட்டத்தில் கொழும்பு வலய பணிப்பாளர் ஜயந்த விக்ரம, பொரளை கோட்ட கல்வி  பணிப்பாளர் கே.ஜி.ஜயரட்ண மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதக்கீட்டுச் செயலாளர் எம்.பிருதிவிராஜ் உட்பட பாடசாலையின் அதிபர் எஸ்.கருணாகரன் ஆகியோரும் கலந்த கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .