2025 நவம்பர் 19, புதன்கிழமை

'அரச பிணைமுறியை விற்க அவசரமில்லை'

Kogilavani   / 2017 பெப்ரவரி 20 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச பிணைமுறியொன்றை (இறைமைப் பிணைமுறி) விற்பதற்கு, அரசாங்கத்துக்கு அவசரம் கிடையாது எனத் தெரிவித்துள்ள நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, இவ்வாண்டில் 1.5 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வரை, அரச பிணைமுறி வழங்குவதற்கான அமைச்சரவை அங்கிகாரம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

"அமைச்சரவை அனுமதி, தற்போது தான் கிடைத்துள்ளது. அதன் (பிணைமுறியின்) பின்னால், நாங்கள் செல்லவில்லை. செய்வதற்கான சிறந்த நிலை எது என்பதை நாங்கள் பார்த்து வருகின்றோம்" என்றும், கொழும்பு - மட்டக்குளி பிரதேசத்தில் அமைந்துள்ள கங்காராம விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, அவர் தெரிவித்தார்.

இலங்கை மீதான ஃபிற்ச் தரப்படுத்தல், "மறை" என்ற நிலையிலிருந்து "நிலையானது"  என்ற நிலைமைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வெளிப்புற நிலையற்ற தன்மைகளுக்கு மத்தியிலும், நிதித் துறையில் ஒழுங்கொன்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக, இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான குழுக்கடனொன்றைப் பெறுவதற்குமான பேரம்பேசல்களிலும், இலங்கை ஈடுபட்டு வருகிறது. இதற்கான பதில்கள், கடந்த முறையை விடச் சிறப்பாக உள்ளதாக, அமைச்சர் குறிப்பிட்டார்.

பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான பணியில், அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் ரவி, கண்டிப்பான பொருளாதாரத் திட்டமொன்றின் கீழ், அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் கூறினார்.

அரசாங்கத்திலும் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திறனிலும் நம்பிக்கை வைக்குமாறு, மக்களைக் கோரிய நிதியமைச்சர், சர்வதேச சமூகத்தின் இதயங்களை வென்று, நாட்டுக்காக சிறந்த எதிர்காலமொன்றை உருவாக்குவதற்கு, ஜனாதிபதியும் பிரதமரும் உறுதிபூண்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X