2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

'நல்லாட்சியில் இனவாதத்துக்கு இடமளியோம்'

Princiya Dixci   / 2016 நவம்பர் 10 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனவாத அரசியலுக்கு, ஒட்சிசன் வழங்கும் ஒரு நிகழ்ச்சியையே, கிழக்கு மாகாணத்தில், அமைச்சர் தயா கமகே முன்னெடுத்துள்ளார். தோல்வியடைந்து போன இனவாதச் சக்திகளுக்கு உயிரூட்டும்  நிகழ்ச்சி நிரலொன்றுக்கு அவர்  ஒத்துழைப்பு வழங்கி வருகிறாரா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது என்று நல்லாட்சிக்கும், சமூக நல்லுறவுக்கும் குந்தகம் விளைவிக்கும் தயா கமகேயின் இந்த இனவாதச் செயற்பாட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் கூறியுள்ளார்.

அண்மையில் அமைச்சர் தயா கமகே கிழக்கு மாகாணத்தில் புத்தர் சிலை வைப்பது தொடர்பாக வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய இனவாத கருத்துக்குப் பதிலளித்து முஜீபுர் றஹ்மானினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

இறக்காமம் - மாணிக்கமடு மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையின் போது அமைச்சர் தயா கமகே இனவாதத்தைக் கக்கும் தனது கருத்தை வெளியிட்டிருந்தார்.

இந்த நாட்டில் புத்த மதத்திற்கே முன்னுரிமை வழக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் ஒவ்வொரு நாளும் 100 முதல் 200 வரையில் புத்தர் சிலைகள் வைக்கப்படுவதாகவும், ஏனைய மதத்தலைவர்களும் புத்த மதத்துக்கு முதலிடம் வழங்குவதற்கு இணங்கியுள்ளதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர்  மற்றும் அமைச்சரவையும் இதனை அனுமதித்துள்ளதாகவும் அமைச்சர் தயா கமகே கூறியுள்ளார்.

அமைச்சர் தயாகமகேயின் இந்தக் இனவாதக் கருத்து, இந்த நாட்டின் சிறுபான்மை சமூகங்களின் பலமான ஆதரவோடு ஆட்சிபீடமேறிய  நல்லாட்சி அரசாங்கத்தின் கட்டமைப்பைச் சீர்குலைக்க  எடுக்கப்பட்ட ஒரு சதிமுயற்சியாகவே அர்த்தப்படுத்தப்பட வேண்டியிருக்கிறது.

சமூக நல்லிணக்கத்தையும், நல்லாட்சியையும் விரும்பியே ஐ.தே.க தலைமையிலான ஆட்சி மாற்றத்துக்கு இந்நாட்டு மக்கள் வாக்களித்தனர். மஹிந்த ராஜபக்ஷவின் இனவாதத்தைத் தோற்கடிப்பதற்கு அணிதிரண்ட மக்களின் சக்திக்கு முன்னால் மடிந்து போன இனவாதத்தை எந்த வடிவிலும் மீண்டும் உயிர்ப்பிக்கவோ, மக்கள் வழங்கிய ஆணையை கொள்ளையடிக்கவோ நல்லாட்சியின் அமைச்சரொருவருக்கு இடமளிக்க, நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை.  

நல்லிணக்கத்துக்குப் பங்கம் விளைவிக்கும், சிறுபான்மை சமூகங்களின் பூர்வீக பிரதேசங்களில் இடம்பெறும் சகல மத, கலாசார ரீதியிலான ஆதிக்கத்தையும், ஆக்கிரமிப்புகளையும் வன்மையாகக் கண்டிப்பதோடு, தோல்வியடைந்து வங்குரோத்து நிலையில் வாழும் மஹிந்தவின் இனவாத அரசியலுக்கு உயிருட்டும் எந்த செயற்திட்டத்துக்கும் எந்த சக்திக்கும் ஒருபோதும் நாம் இடமளிக்க விடமாட்டோம்  என்பதையும் கூறிவைக்க விரும்புகிறேன் எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X