2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

அரசின் சதியை முறியடிக்க தன்னுடன் கைகோர்க்குமாறு மனோ கணேசனுக்கு மேயர் முஸம்மில் கடிதம்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 03 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'மக்களால் தெரிவுசெய்யப்பட்ட கொழும்பு மாநகரசபை நிர்வாகத்தை குழப்பித் தோற்கடிப்பதற்காக அரச அதிகாரங்களையும் முறையற்ற செயற்பாடுகளையும் பிரயோகித்து பல்வேறு சதித் தந்திரோபாயங்களில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.

இந்த இக்கட்டான காலகட்டத்தில், மக்களின் தீர்ப்பைக் காப்பாற்றி அவர்கள் அளித்த வெற்றியை உறுதிப்படுத்தி இந்த மாநகரசபை நிர்வாகத்தின் மூலம் சகல மக்களுக்கும் சீரான, நீதியான பரிபாலனத்தை முன்னெடுப்பதற்கு உங்களினதும் உங்கள் கட்சி உறுப்பினர்களினதும் பூரண ஒத்துழைப்பு எனக்கு மிகவும் அத்தியாவசியமானது' என கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான மனோ கணேசனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் முழு விபரம் பின்வருமாறு...,

'நடந்து முடிந்த கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் தாங்களும் தங்கள் கட்சியும் ஈட்டிய சாதகமான பெறுபேறுகளுக்காக முதலில் தங்களுக்கு வாழ்த்து கூறுகிறேன். இந்தத் தேர்தலில் தலைநகர மக்கள் இரண்டு முக்கிய விடயங்களைத் தமது தீர்ப்பாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள் என்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

01.    பொதுமக்கள் ஐக்கிய முன்னணி தலைமையிலான ஆட்சித் தரப்பின் நிர்வாகத்தை அவர்கள் அடியோடு நிராகரித்திருக்கின்றார்கள்.

02.    ஜனநாயக உரிமைகளுக்கு நெருக்கடி நேர்ந்துள்ள இந்தக் கஷ்டமான காலகட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான நிர்வாகமே கொழும்பு மாநகரசபையை வழிநடத்த வேண்டும் என்ற தெளிவான தீர்ப்பை அவர்கள் வழங்கியிருக்கின்றார்கள்.

கொழும்பு மாநகரில் வாழும் பெரும்பான்மை இனத்தவர்கள் மட்டுமல்லாமல் தமிழர், முஸ்லிம்கள் ஆகிய சிறுபான்மை இனத்தவர்களும் இணைந்து இந்த நம்பிக்கையை ஐக்கிய தேசிய கட்சி மீது வைத்து இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

அதேசமயம், தலைநகரத் தமிழர்களில் மிகக் கணிசமானோர் உங்கள் தலைமைத்துவத்தின் கீழான ஜனநாயக மக்கள் முன்னணி மீது நம்பிக்கை வைத்து, தமது பிரதிநிதித்துவத்தில் பெரும்பங்கை உங்களுக்கு வழங்கி, உங்கள் கரத்தைப் பலப்படுத்தியிருக்கின்றார்கள் என்பதும் தெளிவு. அதற்காக உங்களை வாழ்த்திப் பாராட்டுவதில் மகிழ்கின்றேன்.

இந்தச் சூழ்நிலையில் தமது தோல்வியை சகித்துக்கொள்ள முடியாத ஆளும் தரப்பினர், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட இந்த மாநகரசபை நிர்வாகத்தை குழப்பித் தோற்கடிப்பதற்காக அரச அதிகாரங்களையும் முறையற்ற செயற்பாடுகளையும் பிரயோகித்து பல்வேறு சதித் தந்திரோபாயங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள். மக்கள் தீர்ப்புக்கு எதிரான இந்த ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு சில சக்திகள் துணை போகின்றமை துரதிர்ஷ்டவசமானது.

இந்த நேரத்தில், இந்த இக்கட்டான காலகட்டத்தில், மக்களின் தீர்ப்பைக் காப்பாற்றி அவர்கள் அளித்த வெற்றியை உறுதிப்படுத்தி இந்த மாநகரசபை நிர்வாகத்தின் மூலம் சகல மக்களுக்கும் சீரான, நீதியான பரிபாலனத்தை முன்னெடுப்பதற்கு உங்களினதும் உங்கள் கட்சி உறுப்பினர்களினதும் பூரண ஒத்துழைப்பு எனக்கு மிகவும் அத்தியாவசியமானது என நம்புகின்றேன்.

ஆகவே இந்த மாநகரசபை நிர்வாகத்தை ஆக்கபூர்வமான வழியில் முன்னெடுத்துச் செல்வதற்கு பயனுறுதியுள்ள ஆதரவை வழங்குமாறும், அது குறித்து பகிரங்கமாக அறிவித்து மக்களுக்கு தெளிவுப்படுத்துமாறும் அன்புரிமையுடன் வேண்டுகின்றேன்.'


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X