2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

'எமது அரசியல் முதிர்ச்சியே சகோதரி பிரியாணியின் நியமனம்'

Kogilavani   / 2012 ஜனவரி 24 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'கொழும்பு மாநகரசபையில் எமது தலைவரின் ராஜினாமா காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு சகோதரி பிரியாணி குணரத்னவை நமது கட்சியின் அரசியல் குழு ஏகமனதாக  நியமித்துள்ளது. இந்நியமனம் பல இனத்தவர்கள் வாழும் கொழும்பை தளமாக கொண்டு செயற்படும்  எமது கட்சியின் அரசியல் முதிர்ச்சியை எடுத்துகாட்டுகின்றது. இந்த  நியமனத்திற்கான அரசியல் காரணங்கள் பற்றி  எடுத்து கூறவேண்டியது, கட்சியின் மாநகரசபை உறுப்பினர் குழுவின் தலைவர் என்ற முறையில் எனது கடமை' என ஜனநாயக மக்கள் முன்னனியின் சிரேஷ்ட உப தலைவர் வேலணை வேணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வேலணை வேணியன் மேலும் கூறியுள்ளதாவது,   

'சகோதரி பிரியாணி குணரத்ன எமது கட்சிக்கு புதியவர் அல்ல. 2006ஆம் ஆண்டில் எமது தலைவரும், அமரர் நடராஜா ரவிராஜும் மக்கள் கண்காணிப்பு குழுவை அமைத்த காலத்தில் இருந்து அவர் மக்கள் கண்காணிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டுள்ளார். நமது கட்சியின் நிர்வாக செயலாளராக 2008ஆம் வருடத்தில் இருந்து செயற்படுகிறார்.

கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் உறவினர்களை அழைத்து நாம் கொழும்பில் இரண்டு மாநாடுகளை நடத்தினோம். அதேபோல் 2008ஆம் வருடம் மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஹார்பர் இலங்கை வருவதற்கு வழி ஏற்படுத்தி கொழும்பு ஐ.நா வளாகத்தில் நாம் ஆணையாளருடனான நேரடி மக்கள் சந்திப்புகளை நடத்தினோம். போர் நடைப்பெற்ற காலகட்டத்தில் எம்மால் எமது தலைவர் தலைமையில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கைகள் தமிழ் மக்களின் அவலங்களை உலகறிய செய்தன.

இந்த நிகழ்வுகளை நடத்துவிப்பதில் பாரிய பங்களிப்புகளை வழங்கியவர் மக்கள் கண்காணிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளரான சகோதரி பிரியாணி குணரத்ன ஆவார். எமது மனித உரிமை போராட்டங்களில்  பெறும் பங்காற்றி பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தவர்களுக்கு பெரும் பரீட்சயமான ஒரு சிங்கள முற்போக்காளரான அவர்தான் இன்று  கொழும்பு மாநகரசபைக்கு எமது கட்சியால் ஒரு வருட காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். 

கொழும்பு மாநகரசபை என்பது  யாழ்ப்பாண  அல்லது மட்டக்களப்பு  மாநகரசபைகள் அல்ல. இங்கு மாநகரசபையின் சேவைகளை மக்களுக்கு கொண்டு செல்லும் நிர்வாக இயந்திரத்தில்  முழுமையாக பெரும்பான்மை இன அலுவலர்களே செயற்படுகிறார்கள். சாக்கடை, வீதி திருத்தம், குப்பைகள் அகற்றல், வீதி விளக்குகள் பிரிவு உட்பட அனைத்து பிரிவுகளிலும் தலைமை பொறியியலாளர்களாகவும், உதவி பொறியியலாளர்களாகவும், சிற்றூழியர்களாகவும் பெரும்பான்மை இனத்தவர்களே அநேகமாக கடமை ஆற்றுகின்றார்கள்.

தமிழ் மக்கள் மாநகரசபையுடன் தமிழ் மொழியில் தொடர்புகளை ஏற்படுத்தகூடிய முழுமையான சூழலை நாம் விரைவில் ஏற்படுத்துவோம். அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. ஆனால் மாநகரசபையின் உள்ளக அலுவலர்கள் பெரும்பாலும் சிங்களவர்களாக இருப்பதை உடனடியாக மாற்ற முடியாது. இந்த நடைமுறை நிலைமைகளை நாம் கணக்கில் எடுத்துகொண்டுள்ளோம்.   இந்நிலையில் எனது தலைமையிலான எமது மாநகரசபை உறுப்பினர்களுக்கும், மாநகரசபை இயந்திரத்திற்கும் இடையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயற்படுவதற்காக சகோதரி பிரியாணி குணரத்ன  கட்சியால் நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கு எதிரான  போராட்டங்களுடன்  தன்னை இணைத்துக்கொண்டு  கடந்த ஆறு வருடங்களாக கட்சி பணியாற்றிவரும்  சிங்கள மொழி பேசும் சகோதரி ஒருவர்,  பல இனத்தவர்கள் வாழும் கொழும்பு மாநகரசபைக்கான  எமது உறுப்பினர் குழுவின்  ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானது என நாம் ஏகமனதாக முடிவு செய்துள்ளோம்.

ஏற்கனவே எமது கூட்டணியின் மூலமாக நாம் நவ சமசமாஜ கட்சியின் பொதுசெயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவை தெகிவளை-கல்கிசை மாநகரசபையில்  எமது கட்சியின் சின்னத்தில் உறுப்பினராக்குவதில் வெற்றி கண்டுள்ளோம். கடந்தமுறை கொழும்பு மாநகரசபையில் ஒரு முஸ்லிம் சகோதரர் எமது உறுப்பினாராக நியமிக்கப்பட்டிருந்தார். பல இனத்தவர் கலந்து வாழும் தென்னிலங்கையில், முற்போக்கு நல்லெண்ணம் கொண்ட சிங்கள, முஸ்லிம்  சகோதரர்களையும் உள்வாங்குவது  எமது எமது கட்சியின் கொள்கை ஆகும்.  எமது இந்த கொள்கை தலைநகர மாவட்ட தமிழ் மக்களுக்கான கொழும்பு மற்றும் தெகிவளை-கல்கிசை மாநகர சேவைகளை அர்த்தமுள்ள முறையில் பெற்றுகொடுப்பதில் புதிய ஒரு பரிமாணத்தை ஏற்படுத்தும் என்பதை பணிவன்புடன் தெரிவித்துகொள்கிறேன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .