2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பு மாவட்ட தமிழ் மாணவர்களுக்கு காப்புறுதி திட்டம்

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 20 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கொழும்பு மாவட்டத்தில் உள்ள சுமார் 46 தமிழ் பாடசாலைகளில் 35,000ற்கும் அதிகமான தமிழ் மாணவ மாணவிகள் கல்வி பயில்கின்றார்கள். பாடசாலை நேரத்தில் ஏற்படக் கூடிய விபத்துக்கள், சுகயீனம் போன்றவற்றிற்கு பரிகாரமாக அவர்களுக்கான காப்புறுதி திட்டத்தை அமுல்படுத்த உள்ளேன்' என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பெரும்பான்மையின பாடசாலை மாணவர்களுக்கு பலவிதமான அரச வரப்பிரசாதங்கள் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றில் ஒன்று இப்படியான காப்புறுதி திட்டமாகும். இவர்களுக்கு கிடைக்கும் இவ் அரச வரப்பிரசாதங்கள் எமது தமிழ் பாடசாலை மாணவர்களுக்கும் கிடைக்கப்பெற வேண்டும்.

இது சம்பந்தமாக இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபன அதிகாரிகளிடம் இன்று கலந்துரையாடப்பட்டது. இதனடிப்படையில் பாடசாலை நேரத்தில் ஏற்படும் விபத்துக்கள் சுகயீனம் போன்றவற்றிற்கு உடனடியாக நிவாரணம் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இதன்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்களேயாயின் அதற்குறிய கட்டணத்தை கூட்டுத்தாபனமே முழுமையாக செலுத்தும். இது எமது தமிழ் மாணவர்களுக்கு கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பமாகும். மிகவும் குறைந்த கட்டணத்தையே காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டியிருக்கிறது.

மாணவர்களின் நலனுக்காக இச்சலுகை கட்டணத்தை வழங்கியுள்ள இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அடுத்த வாரமளவில் கூட்டுத்தாபன அதிகாரிகளிடம் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்படவுள்ளது. இந்த காப்புறுதி மூலமாக மாணவர்களின் ஏழை எளிய பெற்றோர்களுக்கு ஏற்படக்கூடிய சுமை குறைக்கப்படவுள்ளது.

இச்சலுகை கட்டணத்தை சமூக நலன்விரும்பிகளின் மூலமாகவும் எனது அரசியல் தொழிற்சங்க கட்சியின் ஊடாகவும் செலுத்துவதற்கு முடிவு செய்துள்ளோம்;. ஆரம்பத்தில் கொழும்பு மாவட்டத்தில் கல்வி பயிலும் 30,000ற்கும் அதிகமான தமிழ் மாணவர்களுக்கு இத்திட்டம் அமுல்படுத்தப்படும்.

அதன் பிறகு ஏனைய மாவட்டங்களுக்கும் இத்திட்டத்தினை அமுல் படுத்த தீர்மானித்துள்ளோம். இதன் மூலமாக பெற்றோர்களுக்கு மட்டுமல்லாது பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கும் அவர்களுக்கான வேலைப்பழு குறைக்கப்படும்.

அடுத்தமாத முற்பகுதியில் இக்காப்புறுதி திட்டம் அமுல் படுத்தப்படுவதற்கான வேலைத்திட்டங்களை தாம் முன்னெடுத்துள்ளதாகவும் அடுத்தமாத இறுதிக்குள் இக்காப்புறுதி அனைத்து கொழும்பு மாவட்ட மாணவர்களுக்கும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .