2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட மீனவர்கள்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 20 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.ஷாஜஹான்


அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி கடந்த 13 மாதங்களாக வழங்காதுள்ள மண்ணெண்ணெய் மானியத்தை தொடர்ந்து வழங்குமாறும் இதுவரையில் வழங்காதுள்ள நிலுவையை வழங்குமாறும் கோரி,  சிறு மீன்பிடித்துறை மீனவர்கள்  மூவர்  மேற்கொண்டுவந்த  சாகும்வரையான  உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று வியாழக்கிழமை இரவு கைவிட்டுள்ளனர்.

மேற்படி விடயம் தொடர்பில் கடந்த திங்கட்கிழமையிலிருந்து  மேற்கொள்ளப்பட்டுவந்த சத்தியாக்கிரகப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு,  சாகும்வரையான  உண்ணாவிரதப் போராட்டத்தை நீர்கொழும்பு மாநகரசபை முன்றலில் இவர்கள் ஆரம்பித்திருந்தனர். இதற்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான மீனவர்களும்  ஒன்றுகூடியிருந்தனர்.

இந்நிலையில்,  உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறும்  இடத்திற்கு வந்த நீர்கொழும்பு குரு முதல்வர்  பட்ரிக் பெரேரா தலைமையிலான கத்தோலிகக மதத் தலைவர்கள், கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால்  மெல்கம் ரஞ்சித்தின் செய்தியை  அங்கு அறிவித்தனர்.

அதாவது, பேராயர் கர்தினால்  மெல்கம் ரஞ்சித் ஜனாதிபதியுடன்  இது தொடர்பில் கலந்துரையாடியதாகவும்  மீனவர்களுக்கு மட்டுமன்றி விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள் ஆகியோருக்கும் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திலிருந்து  நிவாரணம் வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

இதை  ஏற்க மறுத்த மீனவர்கள், பேராயர் கர்தினால்  மெல்கம் ரஞ்சித் நேரடியாக வந்து  இது தொடர்பில் அறிவிக்கும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடருமெனக்; கூறி  உண்ணாவிரதப்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர்  தமது மீனவர் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதை தொடர்ந்து உண்ணாவிரதத்தை இவர்கள் கைவிட்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .