2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

"விழுது" அலுவலகம் மீதான தாக்குதலுக்கு கண்டனம்

Super User   / 2012 ஜனவரி 30 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரச சார்பற்ற நிறுவனமான "விழுது" ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் கொழும்பிலுள்ள அலுவலகம் இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டமையை கண்டிப்பதாக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் குழுவொன்று தெரிவித்துள்ளது.

சுமார் 35 சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கையொப்பமிட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"கொழும்பிலுள்ள அதியுயர் பாதுகாப்பு வலய பிரதேசத்தில் அமைந்துள்ள காரியாலயத்தினையே இனந்தெரியாத நபர்கள் உடைத்து தேடுதல் மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு, சிவில் சமூக அமைப்பு மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை முதற் தடவையல்ல. யுத்ததினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நல்லாட்சி மற்றும் வலுவூட்ட நடவடிக்கைகளை விழுது அமைப்பு மேற்கொண்டு வருகின்றது.

இந்த தாக்குதல் நடவடிக்கை ஜனநாயகம் பெறுமதி, சட்ட முறை மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவற்றிக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது.

இந்த சம்பவத்தை எதிர்காலத்தில் நடக்காமல் இருக்கும் என நம்புகின்றோம். அத்துடன் இது தொடர்பிலான விசாரணைகளை சட்டத்தை அமுல்படுத்துபவர்கள் குறிப்பாக பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக நீதி மற்றும் பெண்கள் உரிமை தொடர்பில் தொடர்ந்து செயற்படுவதற்கு விழுது அமைப்பையும் அதன் தலைவி சாந்தி சச்சிதானந்தத்தையும் நாங்கள் ஊக்குவிக்கின்றோம்" என குறிப்பிட்டுள்ளனர்.

சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.சி.வெலியமுன, தேசிய சமாதான பேரவையின் பணிப்பளார் ஜெஹான் பெரேரா,  மாற்றுக் கொள்கைகளுக்கான அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து உட்பட 35 சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இந்த அறிக்கையில் கையொழுத்திட்டுள்ளனர்

"விழுது" ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் கொழும்பிலுள்ள அலுவலகம் கடந்த 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளது.

இதன்போது இனந்தெரியாத நபர்கள் அலுவலத்திலிருந்த கோப்புகள் மற்றும் ஆவணங்களை ஆராய்ந்துள்ளதுடன் சுமார் 15,000 பணம் காணாமல் போயுள்ளதாக கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலவச சட்ட உதவிகளை வழங்கிவரும் விழுது நிறுவனம், ஊடக கற்கை நெறிகளை நடத்துவதுடன் ஆசிரியர்களுக்கான அகவிழி மற்றும் பெற்றோர்களுக்கான கல்லூரி சஞ்சிகைகளையும் வெளியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X