2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வடமாகாணத்தில் தேசத்துக்கு மகுடம் கண்காட்சி; 2016இல் நடத்த தீர்மானம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தேசத்துக்கு மகுடம் கண்காட்சியினை 2016ஆம் ஆண்டு வடமாகாணத்தில் நடத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

வியாழக்கிழமை (14) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கியதாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா வெள்ளிக்கிழமை (15) தெரிவித்தார்.

வடமாகாணத்தில் இருதய சத்திர சிகிச்சைக்கான துறையொன்றை ஸ்தாபிப்பதற்கு நிதி திரட்டும் பொருட்டு, யாழ் கைலாசப் பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து சைக்கிள் பவனியொன்று இன்று காலை ஆரம்பமாகியது.

இந்தப் பவனியை ஆரம்பித்து வைத்த பின்னர், ஊடகவியலாளர்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

2015ஆம் ஆண்டின் தேசத்துக்கு மகுடம் கண்காட்சி, 2015ஆம் ஆண்டு அம்பாந்தோட்டையில் நடைபெறவிருக்கின்றது. இந்நிலையில், 2016ஆம் ஆண்டு இக்கண்காட்சியை வடமாகாணத்தில் நடத்தவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டிராத உட்கட்டமைப்பு வசதிகள், அபிவிருத்திகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பல கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது  தெரிவித்திருந்தார்.

வடமாகாணத்திற்கு விரைவில் ஜனாதிபதி விஜயம் செய்யவிருப்பதாகவும் அந்நேரத்தில் தேசத்தின் மகுடம் கண்காட்சி வடக்கில் நடத்தவிருப்பதை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதாகவும் எனக்கு கூறினார்.

நான் இங்கே வரும் போது ஜனாதிபதி தொலைபேசியின் ஊடாக என்னுடன் தொடர்புகொண்டு சைக்கிள் பவனியில் கலந்துகொள்பவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்குமாறு கூறினார். அத்துடன், இந்தத் திட்டத்திற்கு அரசாங்கத்தால் முடிந்த உதவிகள் செய்வதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

வடக்குகிற்கும் தெற்கிற்கும் இடையிலான உறவுப்பாலம் ஊடாகவே எமது சகலவிதமான பிரச்சினைகளையும் தீர்த்துகொள்ளலாம் என டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X