2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

காரைநகரில் 60 குடும்பங்கள் இடம்பெயர்வு

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 03 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யோ.வித்தியா

யாழ்ப்பாணம், கரைநகர் - களபூமி பகுதியில் வீடுகளுக்குள் 3 அடி உயரத்தில் வெள்ளநீர் புகுந்தமையால் 60 குடும்பங்கள் இடம்பெயர்ந்து சுந்தரமூர்த்தி நாயனார் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியின் நன்னீர் திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் மேற்படி கிராமத்துக்கும் கடலுக்கும் நடுவில் அணைக்கட்டு ஒன்று, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 40 மில்லியன் ரூபாய் நிதியுதவியின் கீழ் நீர்ப்பாசன திணைக்களத்தால் நிர்மாணிக்கப்பட்டு, நீர் சேகரிக்கப்படுகின்றது.

அளவுக்கதிமாக நீர் சேரும் போது, அணைக்கட்டின் வான்கதவுகள் ஊடாக நீர் திறந்து கடலுக்கு விடப்படுவது வழமை. இருந்தும் திங்கட்கிழமை (01) இரவு பெய்தமழை காரணமாக நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

நீர்ப்பாசன திணைக்களம், நீரை திறந்துவிடாத காரணத்தால் கிராமங்களுக்குள் நீர் புகுந்து வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது. ஜே - 42, ஜே - 44 கிராம அலுவலர் பிரிவு மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இதனையடுத்து ஆத்திரங்கொண்ட மக்கள், அணையை உடைத்தமையால் அணைக்கட்டு சேதத்துக்குள்ளாகியது. இடம்பெயர்ந்த மக்களுக்கு காரைநகர் பிரதேச செயலகம், பிரதேச சபையால் பாண் வழங்கப்படுகின்றது.

பொதுமக்கள் அணைக்கட்டை உடைத்து வெள்ளநீர் வழிந்தோடுவதற்கான வழிகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் மக்களுக்கான உதவிகளை செய்து வருவதாகவும் காரைநகர் பிரதேச செயலாளர் திருமதி தே.பாபு கூறினார்.

இது தொடர்பில் காரைநகர் பிரதேச செயலாளர் வே.ஆனைமுகன் கருத்து கூறுகையில்,
நீர் தேக்கி வைக்கும் அணைக்கட்டு தற்போது அப்பகுதி மக்களால் உடைக்கப்பட்டுள்ளது. இதனால், எதிர்காலத்தில் விவசாய நடவடிக்கை மற்றும் இதர நீர் தேவைகளை பூர்த்தி செய்வதில் சிரமங்கள் ஏற்படும்.

இந்த அணைக்கட்டு, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 40 மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டது. கடந்த 5 நாட்களாக பெய்த மழையில் இப்பகுதியில் நீர் தேங்கியது. நீர்ப்பாசன திணைக்களம், அணைக்கட்டின் கதவை திறந்து நீர் மட்டத்தை சீராக பேணியது.

எனினும், திங்கட்கிழமை (01) இரவு பெய்த மழையால் அப்பகுதியில் அதிகளவு நீர் தேங்கிய போதும், அதனை நீர்ப்பாசன திணைக்களம் திறந்துவிடாமல் அசட்டுத்தன்மையுடன் இருந்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் அணைக்கட்டை உடைத்துள்ளனர்.

இரவிலும் அணைக்கட்டின் கதவை திறப்பதற்கான ஆளணியினரை நீர்ப்பாசன திணைக்களம் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால் இன்று அணைக்கட்டு இல்லாமல் போய்விட்டது. இது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றது என்றார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .