2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

'3 நிமிடங்கள் மௌனமாக இருங்கள்'

George   / 2017 மே 15 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

“முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தன்று, வடக்கிலும் கிழக்கிலும் ஏனைய இடங்களிலும் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் மற்றும் புலம்பெயர் தமிழ்ப்பேசும் மக்கள், காலை 9.30 மணி முதல்,  3 நிமிட நேர மௌன அஞ்சலியை  செலுத்த வேண்டும்” என, வட  மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவுநாள் குறித்து முதலமைச்சர், நேற்று விடுத்துள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ உயிரிழப்புக்கள் ஏற்பட்டு 8 வருடங்கள் ஆகின்றன. அன்று சிறுவர்களாக இருந்தவர்கள் இன்று இளைஞர் - யுவதிகளாக மாறியுள்ளனர்.

“ஆனால், அவர்களின் மனங்களில் கூட அன்று நடந்த பயங்கரமான நிகழ்வுகள், ஓரளவு வடுக்களை விட்டுச் சென்றுள்ளன.
“சாட்சியில்லாது நடத்தப்பட்ட சமரே முள்ளிவாய்க்கால் யுத்தமாகும். வெளியாரின் உள்ளீடுகள் தடுக்கப்பட்டு, ஊடக உள்நுழைவு மறுக்கப்பட்டு, போர் நடைமுறைகளுக்கு முரண்பட்ட விதத்தில் போராயுதங்கள் பாவிக்கப்பட்டு கரவாக மக்களை அழித்தொழித்த சமராக இது காணப்படுகின்றது.

“வட கிழக்கு மாகாண மக்களின் சரித்திரத்தில் மாறா இடம்பெற்றுவிட்ட சோக வரலாற்றுப்பதிவு தினம், எம் மக்களின் வரலாற்றில் ஒரு துக்க தினமாக அனுஷ்டிக்கப்பட வேண்டிய தினமாகும்.

“2009ஆம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி முடிவிலே உயிரிழந்த ஆயிரமாயிரம் பொதுமக்கள் தொடர்பான உண்மை நிலை இது வரைக்கும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படவில்லை. நடந்தது சம்பந்தமான நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணைப்பொறிமுறை இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை. இன்றும் எம் மக்கள் உண்மையை அறிய ஆவலாக உள்ளார்கள்.

“அண்மையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, போரிலே கொல்லப்பட்டவர்களுக்கான நீதி உறுதிப்படுத்தப்படும் என்ற தோரணையில் மேலும் இரு வருடங்கள் கால நீட்சி அளித்துள்ளது.

“வெளிப்படைத்தன்மையுடன் பொறுப்புக் கூறலானது நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே சர்வதேசத்தவர்களின் எதிர்பார்ப்பு. இலங்கை அரசாங்கம் இது பற்றிய உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறியே கால நீட்சி பெற்றுக்கொண்டார்கள். ஆனால் அது பற்றி எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்க அரசாங்கம் முன்வருவதாகத் தெரியவில்லை.

“முன்னைய ஜனாதிபதி சந்திரிக்கா மட்டும் வெளிநாட்டு உள்ளடங்கலுடன் போர்க்குற்ற விசாரணை  நடைபெற வேண்டும் என்ற தமது தனியான கருத்தை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டு உள்ளீடுகள் இல்லாத நீதி விசாரணை ஒரு போதும் உண்மையை வெளிக்கொண்டுவர உதவி செய்யாது.

“18ம் திகதி காலை 9.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் கூடும் மக்கள்,  3 நிமிட நேர மௌன அஞ்சலியை செலுத்துவார்கள். வெளிநாடுகளில் உள்ளவர்கள் தமது வசதிக்கேற்றவாறு மூன்று நிமிடநேர மௌன அஞ்சலியில் ஈடுபடலாம்.

“ஒரு நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படும் போது எவ்வாறு மக்கள் எங்கெங்கு நிற்கின்றார்களோ அங்கு தனித்துநின்று நாட்டுக்கு கௌரவத்தை அளிக்கின்றார்களோ அதேபோன்று  இறந்த எம் உறவுகளுக்காக நினைவஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

“முடியுமானவர்கள், முள்ளிவாய்க்காலுக்கு  வந்து சேர்ந்திருந்து உங்கள் அமைதி அஞ்சலியைச் செலுத்த வேண்டுகின்றேன். பல இடங்களில் இருந்தும் மக்களை ஏற்றிவர, பஸ்கள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன” என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X