2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

'நல்லாட்சி அரசாங்கம் தீர்வுக்கு தயாரில்லை'

George   / 2017 மே 15 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

“நல்லாட்சி என்று கூறப்படுகின்ற அரசாங்கம் தம்மை நல்லவர்களாக காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றதே தவிர, வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய தமிழ் மக்களுக்கான தீர்வைப்பெற்றுத்தர எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவு  நான்காம் நாளான இன்று, நெடுந்தீவில் குமுதினி படகில் இடம்பெற்ற  படுகொலைகளை நினைவு கூர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றபோது அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களின் படுகொலைகள் ஒவ்வொன்றும் வரலாறு. தமிழ் மக்களின் படுகொலைகள் அனைத்தும் அவர்களின் உரிமைகளை கேட்டதற்காக நிகழ்த்தப்பட்டவை.

கொக்கட்டிச்சோலை, மாமாங்கம், வாகரை, குமரபுரம், நவாலி, நாகர்கோவில், குமுதினி படுகொலைகள் குறிப்பிட்டு கூறக்கூடியன. இப்படுகொலைகளின் மூலம் தமிழ் மக்களின் கோரிக்கைகளை அவர்களுடைய இருப்பை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டன.

இப்படுகொலைகள் இடம்பெற்றும் தமிழ் மக்கள் தமது போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்தனர். படுகொலைக்கான நீதியை கோரினர். ஆனால் அவர்களுக்கான தீர்வை வழங்க நீதியை வழங்க தென்னிலங்கையில் எந்த அரசாங்கம் தாயாராகவில்லை. தரவில்லை. தற்போதுள்ள நல்லாட்சி என்று கூறப்படுகின்ற அரசாங்கம் தம்மை நல்லவர்களாக காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றதே தவிர, வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய தமிழ் மக்களுக்கான தீர்வைப்பெற்றுத்தர எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

இதேவேளை, வடகிழக்கில் சிங்கள மக்கள் இல்லாத இடங்களில் கூட வெசாக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. இவற்றின் ஏற்பாடுகளை இராணுவத்தினரே மேற்கொண்டிருந்தனர். இதன் மூலமே இராணுவத்தினரின் பிடிக்குள் தமிழ் மக்கள் உள்ளனர் என்பது புலனாகின்றது.

தமிழ் மக்களின் பூர்வீகமான அதேநேரம் சிங்கள மக்கள் இல்லாத இடங்களில் வெசாக் கொண்டாடப்பட்டுள்ளது. இது ஆக்கிரமிப்பு யுத்தம் ஆகும். எமது பண்பாடுகளை கலாசாரங்களை அழிப்பதனையே நாம் இதனூடாக காண்கின்றோம்.

ஆனாலும், தமிழ் மக்களை கொன்று குவித்த அழித்த இராணுவத்தினர் கொண்டாடிய வெசாக் நிகழ்வுகளில் தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். இதன்மூலம் நல்லிணக்கத்தை தமிழ் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், அரசாங்கம் அவ்வாறு நல்லிணக்கத்தை வெளியிட தயாராக இல்லை. எமக்கான நீதியை தர தயாராகவில்லை” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X