2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'பொதுச் சேவை ஆணைக்குழு தன்னிச்சையாகச் செயற்படுகின்றது'

George   / 2017 ஏப்ரல் 07 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஸன்

“வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு தன்னிச்சையாகச் செயற்பட்டு வருகின்றது. மாகாண சபையை உதாசீனம் செய்யும் வகையில் அதன் செயற்பாடுகள் அமைந்துள்ளது. மாகாண சபை விடயத்தில் மாகாண சபைக்கு இருக்கின்ற அதிகாரங்களிலும் தலையிடுகின்றது. எனவே இந்த நிலை தொடராது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என, வடக்கு மாகாண சபையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (06) இடம்பெற்ற மாகாண சபையின் அமர்வின் போது, தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அதிபர் நியமனம் தொடர்பான விடயம் அவைத்தலைவரால் சபையில் கொண்டுவரப்பட்ட போதே சபை உறுப்பினர்களால் மேற்படி கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கருத்து தெரிவித்த அவைத்தலைவர், “பொதுச்சேவை ஆணைக்குழு வடக்கு மாகாண சபையின் அதிகாரத்தில் தலையிடுவது போன்று செயற்படுகின்றது. நியமனங்கள், பதவியுயர்வுகள் தொடர்பில் விமர்சிக்கும் அதிகாரம் வடக்கு மாகாண சபைக்கு தான் உண்டு,

யாரும் இந்த உயரிய அவையை உதாசீனம் செய்ய முடியாது. மேலும் முறைகேடான நியமங்கள் மற்றும் பதவியுயர்வுகள் தொடர்பில் விசாரணை செய்யும் அதிகாரமும் வடக்கு மாகாண சபைக்கு உண்டு. அதனை யாரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது. தொடர்ந்தும் பொதுச்சேவை ஆணைக்குழு இவ்வாறு செயற்படும் என்றால் ஏனைய மாகாண சபைகளுக்கு முன்னுதாரணமான நடவடிக்கைகளை வடக்கு மாகாண சபை எடுக்க வேண்டியிருக்கும்”  என அவைத்தலைவர் தெரிவித்தார்.

இதன் பின்னர் கருத்து தெரிவித்த உறுப்பினர் சிவாஜிலிங்கம், “நாடாளாவிய ரீதியில் இடமாற்றங்கள் நியமங்கள் தொடர்பில் பொதுச்சேவை ஆணைக்குழுவால் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் நிறைவேற்று அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உண்டு. ஆகவேஅதிகாரிகள் எமக்கு கட்டளையிட முடியாது. இது தொடர்பில் எங்கள் அதிகாரிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும். கல்வி அமைச்சர் செய்யும் வேலைகளை ஆளுனரும் செயலாளரும் செய்கின்றனர்” என, தெரிவித்தார்.

இதன் பின்னர் கருத்து தெரிவித்த உறுப்பினர் லிங்கநாதன், “பொதுச்சேவை ஆணைக்குழு வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்கின்ற இடமாற்றங்கள், பதவி உயர்வுகளில் தன்னிச்சையாகவே செயற்பட்டு வருகின்றது. எனவே மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு வடக்கு மாகாண சபையின் அதிகாரத்தை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும்” என்றார்.

இவ்வாறு தொடர்ந்தும் பொதுச் சேவை ஆணைக்குழு செயற்படுமாக இருந்தால் ஏனைய மாகாண சபைகளுக்கு முன்மாதிரியான நடவடிக்கைகளை வடக்கு மாகாண சபை எடுக்க முடியுமென்றும் அவ்வாறு எடுக்கப்படுமென்றும் அவைத் தலைவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .