2025 ஜூலை 23, புதன்கிழமை

'வடமாகாணத்தில் 86 சிறுவர் திருமணங்கள்'

George   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாணத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு 86 சிறுவர் திருமணங்கள் நடந்துள்ளதாக சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவை திணைக்களத்தின் ஏற்பாட்டிலான சிறுவர் தின நிகழ்வு நீராவியடியில் அமைந்துள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இன்று வெள்ளிக்கிழமை (18) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். 

இன்று விஞ்ஞான தொழில்நுட்ப மாற்றங்கள், வாழ்க்கை வசதிகளில் ஏற்பட்ட அபிவிருத்தி, கைத்தொழில் பெருக்கம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி, நகர மயமாக்கல் என பல காரணிகள் சிறுவர்களை பாரதூரமான விடயங்களுக்கு இட்டுச் செல்வதை நாங்கள் அவதானிக்க வேண்டும். புலனுணர்வைக் கிளர்ச்சியூட்டக் கூடிய ஆபாச வீடியோக்கள் போன்றன கடந்த ஐம்பது ஆண்டுகளிலேயே பாவனைக்கு வந்துள்ளன. போதைப் பொருட் பாவனையில் சிறுவர்களை ஈடுபடுத்துவதும் அண்மைக் காலத்துச் சமூகப் பிறழ்ச்சியே.

இன்று சிறுபிள்ளைகள் பல இடர்பாடுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். குறைந்த சம்பளத்தில் கடின வேலைகளுக்கு அமர்த்தப்படுதல், நெருப்பினால் சூடுபடல், உணவின்றிப்பட்டினி போடப்படல், வீட்டை விட்டுத் துரத்தப்படல், தன்னினப் புணர்ச்சி, வன்புணர்ச்சி போன்ற பல இடர்பாடுகளில் எமது சிறுவர் சிறுமியர் சிக்கித் தவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆசியாவைப்  பொறுத்த வரையில் சிறுவர்கள் பெற்றோர்களின் பாதுகாப்பிலேயே வளர்ந்து வருகின்ற போதிலும் அவர்களின் பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் மீறி பல 'சிறுவர் துஷ்பிரயோகங்கள்' இடம்பெற்று வருவதை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. பெற்றோர்கள் தமது குழந்தைகள் மீது போதிய கரிசனை காட்டாதது இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று.

தமது குழந்தைகள் மீது பற்றும் பாசமும் வைக்காத பெற்றோர்கள், அவர்களின் நடவடிக்கைகளில் கரிசனை காட்டாத பெற்றோர்கள் தமது மக்கள் தறுதலைகள் ஆகிவிட்டார்கள் என்று பின்னர் நெஞ்சிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. தமிழ்ப் பேசும் மக்கள் என்ற முறையில் எமது மக்கட் தொகையைக் கூட்ட வேண்டிய ஒரு கடப்பாடு எமக்கிருந்தாலும் கவனிக்க முடியாத, கரிசனை காட்ட முடியாத குழந்தைகளைப் பெறுவதிலும் பார்க்கப் பெறாதிருப்பதே மேல்.  

இந் நாட்டில் ஏற்பட்ட கொடிய யுத்தத்தின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் நலன்புரி முகாம்களிலும், சிறு கொட்டில்களிலும் தமது வாழ்க்கையை அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி மேற்கொண்டு வருகின்ற நிலையில் அங்கு வாழக்கூடிய சுமார் 1150க்கும் மேற்பட்ட சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதை அவதானிக்கின்றோம். 

இனம், மதம், மொழி, பால் என்ற எந்தவொரு பாகுபாடும் இன்றி குறித்த உரிமைகளை ஒவ்வொரு சிறுவர் சிறுமியரும் அனுபவிக்க நடைமுறையில் விதிமுறைகள் பேணப்படுகின்ற போதும் இவற்றை எமது பிள்ளைகள் அல்லது அவர்களின் பெற்றோர்கள் தெரிந்து வைத்திருக்கின்றார்களா அல்லது அனுபவிக்கின்றார்களா என மதிப்பீடு செய்வோம் ஆயின் எமக்கு கிடைக்கின்ற பெறுபேறுகள் கவலைக்குரியனவாகவே காணப்படுகின்றன. சிறுவர் சிறுமியர் சம்பந்தமாக உரிமைகள் இருக்கின்றன என்பதைப் பலர் அறியாதவர்களாகவே இருக்கின்றனர்' என முதலமைச்சர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .