Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூக ரீதியான புறக்கணிப்புக்கள் பாராபட்சங்களுக்கு இனிமேல் இடமளிக்கப் போவதில்லை. அவ்வாறு செயற்படும் அரச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களைச் சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த காலங்களைப் போன்று உங்களுக்கு இனி அநீதிகள் இடம்பெறமாட்டாது. எப்பொழுதும் நாம் உங்களின் உரிமைகள் நலன்கள் தொடர்பில் அக்கறையோடு இருப்போம்.
எல்லாவற்றுக்கும் நீங்கள் நம்பிக்கையோடு இருங்கள். நம்பிக்கைதான் உங்களை வழமைக்கும் திருப்பும். உங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தொழிற்துறையை விருத்தி செய்யவும் பல தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து உங்களுக்கான உதவிகளைச் செய்து தருவதிலும் கவனம் செலுத்தி வருகின்றோம்.
நூறுவீதம் உங்களுடைய எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்யமுடியாது இருப்பினும் இயலுமானவரை அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் சேர்ந்து உங்களின் வாழ்க்கையை இயல்புநிலைக்குக் கொண்டுவருவதற்கு கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
கண்ணிவெடி விடயத்தில் நிதானமாக செயற்பட வேண்டும். கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு குறித்த நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர் நீங்கள் உங்களுடைய இடங்களுக்குப் பயமின்றிச் செல்லலாம்.
பளைப்பிரதேச செயலர் பிரிவில் பல்வேறு இடங்களில் மக்களைச் சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள், மீள்குடியேற்றித்திற்காக புலோப்பளை மேற்கு றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு கொண்டுவரப்பட்ட மக்களையும் சந்தித்தார். அத்தோடு பனை தென்னை அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்களையும் சந்தித்து அவர்களின் தேவைகளையும் கேட்டுக்கொண்டார்.
அந்த வகையில் அப்பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.
100 மில்லியன் ரூபா செலவில் பளை மத்திய கல்லூரி புனரமைக்கப்படும் என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பெருமளவு நிதிப் பங்களிப்பில் வடக்கிற்கான மின்சார விநியோக வேலைகள் மேற்கொள்ளப்படும் என்றும் படித்த இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் வைத்தியசாலை பூரணமாக இயங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அந்தவகையில் சுமார் 120 வைத்தியர்கள் இவ்வருட இறுதிக்குள் வடக்கிற்கு நியமனம் பெற உள்ளனர். அவ்வாறே தாதியர்களும் தங்களுடைய பயிற்சிகளை முடித்துக் கொண்டு இப்பிரதேசங்களுக்கு வரவுள்ளனர் என்றும் முன்பள்ளிகள் அபிவிருத்திக்கான அமைச்சரவை அங்கீகாரம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சகல திட்டங்களின் மூலம் வீதிகள் பொது மண்டபங்கள் புனரமைக்கப்படும் என்றும் தொழில்களை மேற்கொள்வதற்கான உபகரணங்கள் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago