2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வலி. வடக்கு பிரதேசத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வலிகாமம் வடக்கு பிரதேசத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவரும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றுள்ளது.

வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பல்வேறு அபிவிருத்தி செயற்றிட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக மீள்குடியேற்றம் வீட்டுத்திட்டம், வாழ்வாதாரம், கல்வி, வீதி திருத்தம், போக்குவரத்து, சுகாதாரம், விவசாயம், கால்நடை அபிவிருத்தி, கடற்றொழில், கூட்டுறவு, பிரதேசசபை, தபால், சமூர்த்தி, மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக துறைசார்ந்த அதிகாரிகளுடனும், மக்களுடனும் கலந்துரையாடி அவர்களது தேவைகள் பிரச்சினைகள் குறித்து கேட்டறியப்பட்டது.

குறிப்பாக வீதி திருத்தம், போக்குவரத்து, கல்வி, விவசாயம், குடிநீர், மீள்குடியேற்றம், வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

அதன் பிரகாரம் குடிநீருக்காக கிணறுகள் திருத்தம் செய்தல், மலசலகூடங்களை அமைத்தல், வீடுகளைத் திருத்தம் செய்தல், தொடர்பாகவும் வீதி திருத்தப் பணிகள் மற்றும் மின்சார வேலைத் திட்டங்கள் சித்திரை புத்தாண்டுக்குப் பின்னர் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென துறைசார்ந்தோரிடம் இதன் போது அமைச்சர் கேட்டுக்கொண்டதுடன், அவ்வாறு பணிகள் செய்யப்படாது விட்டால் தமது கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் மீள்குடியமர்வின் போது 5000 ரூபா வழங்கப்பட்ட குடும்பங்களுக்கு மேலும் 20,000 ரூபா வழங்கப்படுவதற்கும், வித்தகபுரம் பகுதியில் வெற்றிலைச் செய்கைக்காக 100 பேருக்கு உடனடியாக உதவித் திட்டங்கள் வழங்கப்படுமெனவும், ஜெசாக் திட்டத்தின் மூலம் 100 வீடுகளை தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கும், 100 வீடுகளை அரியாலை கிழக்குப் பகுதியில் அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் தேசிய வீடமைப்பு அதிகார சபையினூடாக கடன்திட்டத்தைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனிடையே நகுலேஸ்வரம் வீதி, அம்பனை கொல்லங்கலட்டி வீதிகளை திறப்பது தொடர்பில் ஆராயப்பட்டதுடன் நகுலேஸ்வரம் மகா வித்தியாலயம், கட்டுவன்புலன் மகாவித்தியாலயம், குட்டியபுலம் மகாவித்தியாலயம். பன்னாலை சேர் கனகசபை வித்தியாலயம் ஆகியவற்றினது திருத்தங்கள் மற்றும் இடமாற்றம் செய்வது தொடர்பிலும் இந்த கூட்டத்தின் போது ஆராயப்பட்டது.

அத்துடன், பாடசாலைகளை அதன் சொந்த இடங்களில் மீள இயக்குவது தொடர்பிலுள்ள சாதக பாதக நிலைகள் தொடர்பாக கல்வித்துறை சார்ந்தோரிடம் கேட்டறியப்பட்டதுடன் பாடசாலைகளை மீண்டும் அவற்றின் பழைய இடங்களில் இயக்குவதற்கு நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் அமைச்சரினால் பணிப்புரை வழங்கப்பட்டது.

இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மீள்குடியேற்றம், அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் சந்தித்துவரும் இடர்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

இதில் தெல்லிப்பளை பிரதேச செயலர் முரளிதரன், ஈ.பி.டி.பியின் வலிகாமம் இணைப்பாளர் ஜீவன், ஈ.பி.டி.பியின் வலி வடக்கு பிரதேச அமைப்பாளர் அன்பு, உள்ளிட்ட துறைசார்ந்த அரச, அரச சார்பற்ற திணைக்களங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X