2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ் குற்றச்செயல்களை நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்கவும்: பொலிஸாருக்கு டக்ளஸ் பணிப்புரை

Menaka Mookandi   / 2011 நவம்பர் 03 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். நகரப் பகுதியில் இடம்பெற்றுவரும் குற்றச்செயல்கள் மற்றும் சட்டவிரோதச் செயல்களை நிறுத்துவதற்கு பொலிஸார் விரைவான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்றைய தினம் செயலக மண்டபத்தில் அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற போதே அவர் இந்தப் பணிப்புரையினை விடுத்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'யாழ் நகரம் மட்டுமல்லாது மாவட்டத்தின் முழுமையான பகுதிகளிலும் அண்மைக் காலமாக குற்றச் செயல்களும், சமூக விரோதச் செயல்களும் இடம்பெற்று வரும் நிலையில் அவற்றை பொலிஸாரின் உதவியுடன் எதிர்வரும் நாட்களில் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் இதற்கென மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பொலிஸ் பிரிவுக்கும் மோட்டார் சைக்கிள்களை அடுத்த வருட முற்பகுதியில் பெற்றுத் தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். 

சமூக விரோத குற்றச்செயல்களை தடுப்பதற்கு விழிப்புணர்வே முக்கியமானது.  அதனை உணர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்ட அமைச்சர், இதற்காக பொலிஸாரின் உதவி நாடப்படும் என்பதுடன் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பில் தகவல் தெரிவிப்பின் நகரப் பகுதியிலுள்ள பிரதான பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக தமிழ்மொழி மூலம் தகவல் தெரிவிக்க முடியும் எனவும் மக்களின் போக்குவரத்திற்கு தடையாக செயற்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இன்றைய கூட்டத்தில் வீதி அபிவிருத்தி, சுகாதாரம், டெங்கு ஒழிப்பு, காணிப் பிரச்சினை, மழை நீர் வடிகால்களின் தற்போதைய நிலவரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்ட அமைச்சர் அவர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முகமாக துறைசார்ந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டதுடன் நிவர்த்தி செய்யக் கூடிய பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணுமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.

மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக சமூகத்தினரின் கோரிக்கைக்கு அமைய ஸ்ரான்லி வீதியிலிருந்து பேரூந்து தரிப்பிடத்திற்குச் செல்லும் பாதையை ஒருவழிப் பாதையாக வரும் திங்கள் முதல் அமுல்படுத்துமாறும், டெங்கு நோயை தடுக்கும் விதமாக யாழ் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வெற்றுக் காணிகளை யாழ் மாநகர சபை கையகப்படுத்தி பாதுகாக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் அடுத்தாண்டின் முற்பகுதியிலிருந்து யாழ்ப்பாண பிரதேச செயலகத்திலிருந்து வேறிடத்திற்கு மாற்றலாகிச் செல்லும் தற்போதைய பிரதேச செயலர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரத்திற்கு தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அமைச்சர் அவர்கள் இதன்போது தெரிவித்துக் கொண்டார்.

இன்றைய கூட்டத்தில் ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின், யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட திணைக்களங்களின் துறைசார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X