2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை அனுமதிக்காக பணம் அறவிடப்படுவதை நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் உத்தரவு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 03 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரபல்யமான நகரப் பாடசாலைகளில் அனுமதிக்காக வறிய மாணவர்களிடமிருந்து பெறப்படுகின்ற பணம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நல்லூர் பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாரின் உதவிகள் பெறப்படுமெனவும் இதற்கு கிராமங்கள் தோறும் விழிப்புக் குழுக்களை அமைத்து அதனூடாக கட்டுப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் குறித்த பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சில வடிகால்களை வீதி அபிவிருத்தி திணைக்களத்திடமும், வீதி அபிவிருத்தி அதிகார சபையிடமும் இருந்து யாழ் மாநகர சபை கையேற்க வேண்டுமெனவும் குறிப்பிட்ட அமைச்சர், அரியாலை கிழக்குப் பகுதிகளில் படைத்தரப்பால் சட்ட விரோதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் அகழ்வை பொலிஸாரின் உதவியுடன் கட்டுப்படுத்துவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.

மீள்குடியேற்றம் நடைபெற்ற அரியாலை கிழக்கிற்கான பிரதான வீதியை மக்களினதும் வாகனங்களினதும் போக்குவரத்துக்காக அடுத்தாண்டு முற்பகுதியில் விரைவாக செய்து முடிக்க வேண்டுமெனவும் துறைசார்ந்தவர்களிடம் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதனிடையே கிராமப்புறப் பாடசாலைகளை விடுத்து நகரப் பகுதிகளிலுள்ள பிரபல பாடசாலைகளில் கல்வி கற்பிக்க விரும்பும் மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து அனுமதிக்காக பெருந்தொகைப் பணமும் பாடசாலை நிர்வாகங்களால் பெற்றுக் கொள்ளப்படுவதாக மக்கள் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக ஆராய்ந்த அமைச்சர் வறிய மாணவர்களிடமிருந்து அனுமதிக்காக பணம் பெற்றுக் கொள்ளப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் சொந்தக் காணிகள் இல்லாதவர்களுக்கு அரச காணிகளைப் பகிர்ந்தளிப்பது, கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்துவது மற்றும் வயற் காணிகளில் கட்டிடங்களை அமைப்பது நிறுத்தப்படுவது, மின்சார விநியோகம், குடிநீர்ப்பிரச்சினைக்குத் தீர்வு, நீர்வடிகால்களின் தற்போதைய நிலைப்பாடு, சுகாதாரம், டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டன.

இதில் ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்), யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X