Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 நவம்பர் 22 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வடமாகாணத்தின் கல்வி அபிவிருத்திக்காக இந்த வருடம் இரண்டாயிரம் மில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளதாக வடமாகாண கல்வி அபிவிருத்தி வேலைத்திட்ட கலந்துரையாடலின்போது சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோரின் இணைத்தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போதே மேற்படி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடமாகாணக் கல்விப்புல அபிவிருத்திக்கென மூன்று வகையில் நிதிகள் கிடைக்கின்றன. அரச நிதியொதுக்கீடு, விசேட செயற்றிட்ட நிதிகள், அரசசார்பற்ற நிறுவன நிதிகள். இவை எதிர்காலத்தில் எவ்வகையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்பது குறித்து தீர்மானிக்கப்படுகின்றது. பாடசாலைகளின் மாணவர் தொகைக்கேற்ப அங்குள்ள கட்டட இடப்பரப்பின் அளவின்போதும் தன்மை, பௌதீகவளங்களின் தேவை, உபகரணங்களின் தேவை என்பன மதிப்பீடு செய்யப்படுதல் வேண்டும்.
மேலும் வடமாகாணத்தின் கல்வி அமைச்சு மாகாணக்கல்வித் திணைக்களம், வலயக்கல்வித் திணைக்களங்கள், கோட்டங்கள் என்பன நிரந்தரமானதும் வசதியான நிர்வாகத்திற்குரியதுமான கட்டட வசதிகளோ ஏனைய உபகரண வசதிகளோ இல்லாத நிலையுள்ளது.
இவ்வாறான இடங்களில் கட்டடங்கள் அமைக்க வழி காணப்பட வேண்டும். அத்தோடு வடமாகாணத்தின் பாடசாலைகளில் விடுதிகள் தேவைப்படுமென அடையாளம் காணப்படும் பாடசாலைகளுக்கு விடுதி வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். குறிப்பாக வன்னி வலயப் பாடசாலைகளுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இதன் மூலம் ஆசிரியர்கள் அப்பிரதேசப் பாடசாலைகளுக்கு சென்று பணிபுரிவதை ஊக்கப்படுத்த முடியும்.
இனங்காணப்பட்ட பாடசாலைகளில் மாணவர்களுக்கான விடுதிகளை அமைப்பதன் மூலம் கஷ்ட பிரதேச மாணவர்கள் தரமான கல்வியைப் பெறமுடியும். மேலும் வடமாகாணப் பாடசாலைகளிலுள்ள கட்டங்களில் திருத்த வேலைகளுக்கு போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
மாணவர்களுக்கான பொதுப் பரீட்சைகள் நடைபெறவுள்ள காலங்களில் ஒரு மாதத்திற்கு முன்னரும் பரீட்சைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலங்களில் கோவில்களில் ஒலிபெருக்கிப் பாவனையானது சுற்றாடலிலுள்ள வீடுகளில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாதிருக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
வடமாகாணத்தின் சகல கல்வி நிறுவனங்களும் அதனை வழிநடத்தும் சகல அதிகாரிகளும் அரசாங்க நிதி மற்றும் நிர்வாக சுற்றுநிரூபங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். நிதி நிர்வாக சுற்றுநிரூபங்களை சகல ஆசிரியர்களுக்கும் பார்வையிட வைப்பதுடன் முதல் ஒப்பம் பெறப்பட்டு கோவைப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
கல்வியமைச்சின் சுற்றுநிரூபத்துக்கு விரோதமாக பாடசாலை மாணவர்களை அனுமதிப்பதற்கு நன்கொடை, உதவித்தொகை, அன்பளிப்பென பல்வேறு வழிகளில் மாணவர் அனுமதிக்காக பணத்தை வசூலிப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பணம் வசூலிப்பது உறுதிப்படுத்தப்பட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். இந்த விடயம் கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற கல்வி அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
மேலும் அரசாங்க சுற்றுநிரூபத்திற்கமைய பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களின் நிதிச் செயற்பாடுகள் அமைய வேண்டும். இதை அடுத்த வருடம் முதலாம் மாதம், முதலாம் திகதி சகல பாடசாலைகளும் கடைப்பிடிக்க ஆவண செய்யப்பட வேண்டும். அதிபரின் வகைகூறல் மிக முக்கியம் பெறுகின்றது.
வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றும் எல்.இளங்கோவன், வடமாகாண ஆளுநரின் செயலாளராகவும் பணிபுரிந்து வருவதனால் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளராக வேறொருவர் நியமிக்கப்பட வேண்டும். ஏனெனில், வடமாகாணத்தின் 1,044 பாடசாலைகளையும் அங்கு கடமையாற்றும் 14,400 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்களையும் 254,680 மாணவர்களையும் நிர்வகிக்கும் பொறுப்பு கல்வியமைச்சின் செயலாளரையே சாரும். எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இவ்வாறான பல விடயங்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .