2025 மே 17, சனிக்கிழமை

யாழின் நிலைமைகள் குறித்து நோர்வேத் தூதரக அதிகாரிகள் ஆராய்வு

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 07 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி,தாஸ்)

யாழ். மாவட்டத்திற்கான விஜயம் மேற்கொண்டுள்ள நோர்வேத் தூதரக அதிகாரிகள்  அங்குள்ள நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கிறதாவெனவும் வலி. வடக்கில்  மீள்குடியேற்றம் செய்யப்பட்ட இடங்களின் விபரங்களையும் யாழ். மாவட்டத்திலுள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்தும் இலங்கைக்கான நோர்வேத் தூதரக அதிகாரிகள் கேட்டறிந்துகொண்டதாக  யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.  

யாழ். மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நோர்வேத் தூதரக அதிகாரிகளுக்கும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாருக்கும் இடையிலான சந்திப்பு  இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போதே யாழ். மாவட்டத்தின் நிலைமைகள் குறித்து நோர்வேத் தூதரக அதிகாரிகள் கேட்டறிந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.

யாழ். மாவட்டத்தில் கண் வைத்தியசாலையொன்றை அமைப்பதற்கு நோர்வே அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தான் கேட்டுக்கொண்டபோது,
தாங்கள் மீண்டும் வரும்போது இது குறித்து கவனம் செலுத்துவதாகவும் நோர்வேத் தூதரக அதிகாரிகள் கூறியதாக  யாழ். அரசாங்க அதிபர் தெரிவித்தார்

இதனைத் தொடர்ந்து யாழ். ஆயர் இல்லத்தில் ஆயர் தோமஸ் சௌந்தர நாயகம் ஆண்டகையையும் நோர்வேத் தூதரக அதிகாரிகள் இன்று புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது நிம்மதியாக வாழவேண்டுமானால்  தங்களுக்கு அரசியல்த் தீர்வு அவசியமென நோர்வேத் தூதரக அதிகாரிகளிடம், யாழ். ஆயர்  தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியிலும் தமிழ் மக்களின் மனங்களில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.   மக்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய சூழல் இன்னமும் இங்கு ஏற்படுத்தப்படவில்லை.  

அபிவிருத்திக்கான கட்டமைப்புக்கள் சரியான முறையில் யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் தங்களுக்கான அரசியல் தீர்வுகள் கிடைக்காமலிருப்பது மனவருத்தமளிக்கிறது.

மக்களின் வாழ்வியலில் படிப்படியான முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும்கூட மக்களின் மனங்களில் வெறுமை மட்டுமே காணப்படுகிறது. மீள்குடியேற்றங்கள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றபோதிலும்,  மீள்குடியமர்ந்த மக்களின் அடிப்படைத் தேவைகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லையென நோர்வேத் தூதரக அதிகாரிகளிடம் யாழ். ஆயர் தோமஸ் சௌந்தர நாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான நோர்வேத் தூதுவர்  ஹில்டே ஹரால்ஸ்டட்,  தூதரக மேல் நிலை அதிகாரிகளான கெய்ரோ பெடேர்ஸி, லஸி பி.ஜோஹான்ஸன் ஆகியோர் இவ்விரு சந்திப்புக்களிலும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .