2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

யாழில் நடைபாதையோர கடைகளை அகற்ற நடவடிக்கை

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 02 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (கவிசுகி)
   
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள நடைபாதையோர  வியாபாரக் கடைகள் நகரின் அழகிற்கு தடையாக இருப்பதாகவும் இதனால் இக்கடைகளை  முற்றாக அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வர்த்தக சங்கத்துடன் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின்போதே  அவர் இவ்வாறு கூறினார்.

யாழ். நகருக்கு உட்பட்ட சில பகுதிகள் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது என்றும் இதனை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் இதனால் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்க முடியும்.  அந்த வகையில் ஸ்ரான்லி வீதி வரையுள்ள கஸ்தூரியார் வீதி வரையான ஒருவழிப் பாதை கன்னாதிட்டி சந்தியில் இருந்து வண்ணார்பண்ணை சிவன் கோவில் வரை நீடிக்கப்பட்டுள்ளது. பஸார் வீதியும் காங்கேசன்துறை வீதியும் இணையும் வீதி ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். 

மேலும் கஸ்தூரியார் வீதியில் வாகனங்களில் இருந்து பொருட்களை ஏற்றி இறக்கும் நடவடிக்கை காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையும் அல்லது மாலை 6 மணிக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் யாழ். மாநகரசபை முதல்வர்  குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்பத்திரி வீதி, கஸ்தூரியார் வீதி, பஸார் வீதி ஆகிய நகரைச் சுற்றியுள்ள அனைத்து வீதிகளிலும் ஒற்றை நாட்களான திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களிலும்  இரட்டை நாட்களான செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஏதாவது ஒரு தொகுதி நாட்களை வர்த்தகர்களின் தெரிவிற்கு ஏற்ப வாகனத் தரிப்பிற்கு அனுமதிக்கப்படும்.

முச்சக்கரவண்டிச் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தூர இடங்களில் இருந்து வரும் பஸ் பயணிகளை காலை 7.30 மணிவரை மின்சார நிலைய வீதியில் இறங்குவதற்கு அனுமதிக்கப்படும் எனவும் யாழ். மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X