2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

தமிழர்களை சொந்த மண்ணிலிருந்து விரட்டும் வேலைத்திட்டத்தை அரசு மேற்கொள்கிறது: த.தே.ம.மு

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 26 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


'தமிழர்களை பொருளாதார ரீதியாக நசுக்கி அவர்களை சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றுகின்ற வேலைத்திட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது' என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டினார்.

இன்று ஞாயிற்றிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'தமிழ் மக்களை பொறுத்தவரையில் அவர்களின் பொருளாதாரம் கடற்தொழிலையும் கமத்தொழிலையும் அடிப்படையாகக் கொண்டது. தமிழ் மக்களின் பொருளாதார வழிமுறைகளை நசுக்கி அவர்களின் இருப்பை இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் அரசு தற்போது இறங்கியுள்ளது.

குறிப்பாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட முல்லைத்தீவு மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் உள்ள கடற்தொழிலாளர்கள், கடற்தொழில் மேற்கொள்வதில் பல்வேறு விதமான இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக முல்லைத்தீவில் உள்ள கடற்தொழிலாளர்களின் நலன் சார்ந்து செயற்படுகின்ற கடற்தொழிலாளர் கூட்;டுறவுச் சங்கங்களின் சமாசத்திற்கு இராணுவத்தினர் இடையூறு விழைவித்து வருகின்றனர். தாங்கள் விரும்பும் நபர்களை நிர்வாக உறுப்பினர்களாக தெரிவு செய்வதுடன் சுதந்திரமான செயற்பாட்டுக்கும் தடைவிதித்து வருவதாக கடற்தொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் தென்னிலங்கையில் இருந்து வருகை தந்துள்ள சிங்கள மீனவர்களினால் எமது கடல் வளங்கள் அழிக்கப்டுவதுடன் எமது தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளவாகி வருகின்றனர். 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் நாயாறு தொடக்கம் சுண்டிக்குளம் வரையான கடற்பகுதியில் 3000க்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் கடற்தொழிலில் ஈடுபட்டு வந்தனர். தற்போது 600 வரையான மீனவர்களே தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த பிரதேசத்தில் சிங்கள மீனவர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதினாலும் அரசாங்கதினால் எமது மீனவர்களின் நலன்கள் சரியாகப் பேணப்படாத காரணத்தினாலும் பலர் தொழிலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் மாற்றுத் தொழில் தேடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தினால் நாயாற்றுப் பகுதியில் 30 குடும்பங்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த போதும் தற்போது 300க் மேற்பட்ட சிங்கள குடும்பங்கள் கடற்தொழிலில் ஈடுபட்டு வருவதோடு சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட மீன்பிடிமுறையினையும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் தமிழ் மக்களின் வளங்கள் அழிக்கப்படுவதோடு தமிழ் மக்களின் வாழ்வாதாரமும் சிதைக்கப்படுகின்றது. இது அரசாங்கத்தின் திட்டமிட்ட ஒரு வேலைத்திட்டமாக அமைந்துள்ளது. இது ஒரு சமுதாயத்தின் பிரச்சினையாக நாங்கள் பார்க்க முடியாது. இது ஒட்டுமொத்த தமிழினத்தின் பிச்சனையாகும்.

பொருளாதார ரீதியாக தமிழ் மக்களுக்கு பிரச்சினையை உண்டு பண்ணி தமிழ் மக்களை அவர்களின் சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றுகின்ற வேலையாக இது இருக்கின்றது. இந்தப்பிரச்சினை தொடர்பாக ஏனையவர்களிடம் கதைத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கவுள்ளோம்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X