2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

காணி சார்ந்த ஆவணங்களில் கையொப்பம் இடுவதை தவிர்க்கவும்: எஸ்.சஜீவன்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 26 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

காணி சுவீகரிப்புக்கு எதிராக பிரதேச செயலகங்களினால் வழங்கப்படும் ஆங்கில படிவங்களில் கையொப்பமிடுவதை தவிர்க்குமாறு வலி. வடக்கு பிரதேச சபை உபதலைவரும் இடம்பெயர்ந்த மக்கள் குழு தலைவருமாகிய சஜீவன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று மதியம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

'யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய பிரதேச செயலாளரினால் ஆங்கில படிவங்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கு கையளிக்கப்பட்டு, கையொப்பம் பெற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நடவடிக்கை நல்லூர், பருத்தித்துறை, கரவெட்டி, தெல்லிப்பளை, பிரதேச செயலகங்களில் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அத்துடன், இடம்பெயர்ந்த குடும்ப அட்டைகளை நிரந்தர குடும்ப அட்டைகளாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த குடும்ப அட்டைகள் மாற்றுவது தொடர்பாக இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்ற அமைப்புக்கள் அரச அதிபரிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த குடும்ப அட்டைமாற்றுதல் மற்றும், காணி சுவீகரிப்புக்கு எதிரான விண்ணப்ப படிவங்களில் கையொப்பமிடும் நடவடிக்கைகளை உடனடியாக தவிர்க்குமாறு, வலி. வடக்கு பிரதேச சபை உபதலைவரும், இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்ற குழு தலைவரும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன், காணி சூவீகரிப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளதால், சட்டத்தரணிகளின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறும், சிறிது காலம் காணி சுவீகரிப்புக்கு எதிரான ஆவணங்களில் கையொப்பமிடும் செயற்பாட்டில் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அவர் வலி வடக்கு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வலி வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 6ஆம் திகதி கொழும்பு உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளதாகவும், எதிர்வரும் 29ஆம் திகதி வலி. வடக்கு காணி அபகரிப்புக்கு எதிராக கொழும்பில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும்' அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X