2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

அபிவிருத்தி அரசியல் தீர்வுக்கு ஈடாகாது: ஐங்கரநேசன்

Kogilavani   / 2014 பெப்ரவரி 16 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் ஒருபோதும் அரசியற் தீர்வுக்கு ஈடாகாது என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் நேற்று சனிக்கிழமை (15) தெரிவித்தார்.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று சனிக்கிழமை (15) காலை முதல் யாழ்.முனியப்பர் ஆலயத்திற்கு முன்னால் நடைபெற்றது.  இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

 'இடம்பெயர்ந்த மக்களை தமது சொந்த நிலங்களில் குடியேற்றுவதற்கும், எங்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதற்கு எதிராகவும் இந்த ஆர்ப்பாட்ட போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இருந்தும், இந்த ஆர்ப்பாட்ட போராட்டத்தில் மக்கள் கலந்துகொள்ளக்கூடாதென்று இராணுவ தரப்பில் இருந்து பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அழுத்தங்களையும் மீறி மக்கள் ஒன்று கூடியிருக்கின்றார்கள்.

உண்மையில், இந்த அரசாங்கம் போரினால், எற்படுத்தப்பட்ட காயங்களை மறைப்பதற்கான ஒரு கருவியாக அபிவிருத்தியை பயன்படுத்துகின்றது. அதன் ஒரு முயற்சியாகவும் அதனை வெளிநாடுகளுக்கு காட்டுவதற்காகவுமே இங்கு அபிவிருத்தியை செய்கின்றது.

தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் அரசாங்கம் எவ்வளவு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அந்த அபிவிருத்தி என்பது எமது அரசியல் தீர்;வுக்கு ஈடாகாது என்பதனை இங்கு அழுத்தமாகக் கூறிவைக்க விரும்புகின்றேன். அத்துடன், சமாதானத்திற்கான தீர்;வாகவும் இந்த அபிவிருத்தி அமையாது.

அபிவிருத்தியின் பின்னால், எமது வளங்களையும், மக்களின் உழைப்பினையும் சுரண்டுகின்ற மேலாதிக்க சிந்தனையும் தான் நிலைத்து நிற்கும். எமது மக்களின் பயன்களை தென்பகுதியினர் அனுபவிப்பவர்களாக இருக்கும் பொழுது, எமது மக்களின் வாழ்க்கைத்தரம் தொடர்ச்சியாக கீழே போய்க்கொண்டிருக்கின்றது.

இதனால், அரசாங்கம் நினைப்பது போன்று சமாதானத்திற்கான தீர்வாக அமைய முடியாது. இடம்பெயர்ந்த மக்கள் இன்றும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பவில்லை. எமது கடலில் எமது மீனவர்கள் முறையான தொழிலினை மேற்கொள்ள முடியவில்லை.

எமது நிலங்களில் உச்ச பயனைப்பெறும் இடங்கள் அனைத்தும் இராணுவத்தின் வசம் இருக்கின்றன. உண்மையில் யாழ். மாவட்டத்தில் விவசாயத்திற்கு சிறந்த இடம் வலி.வடக்குத்தான். வலி.வடக்கினை நிரந்தரமாக தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அங்கு இராணுவக் குடியிருப்புக்களை நிறுவி வருகின்றார்கள். அது மாத்திரமல்ல, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை இயக்க வேண்டாமென நாம் கூறிவருகின்றோம்.

இருந்தும் அதனை வெளிநாட்டு நிறுவனமொன்றிற்கு 90 வருட குத்தகைக்கு விடுவதற்கு இலங்கை அரசு தீர்மானித்துக் கொண்டிருக்கின்றது. இதனை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம்.

அபிவிருத்தி எமது அரசியல் தீர்வுக்கும், சமாதானத்திற்கும் தீர்வாக அமையாது. எமது சுயநிர்ணய உரிமையுடன் கூடிய எம்மை நாமே ஆளக்கூடிய, எமது அபிவிருத்தியை நாமே மேற்கொள்ளக்கூடிய, எமது தலைவிதியை நாமே பார்க்க கூடிய அரசியல் அதிகாரங்களே எமக்கு வேண்டும்' என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .