2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

யாழ். பண்ணைவீதி புனரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2014 மார்ச் 19 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ். பண்ணைவீதி புனரமைப்பின் போது கருத்திற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றது.

இதன்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் பண்ணை வீதி தற்போது அகலப்படுத்தப்பட்டு மீள்புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதன் புனரமைப்பு பணிகளின் போது கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் அமைச்சர் விசேட கவனம் செலுத்தினார்.

முக்கியமாக புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் அதன் கழிவுகளை கடலில் கைவிடாது அவற்றை கரையுடன் இணைத்து செப்பனிடப்பட வேண்டும் அல்லது அப்புறப்படுத்தப்பட வேண்டுமெனவும் துறைசார்ந்தோரிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், வீதி அகலிப்பு பணிகளின் போது வீதியோரங்களிலுள்ள மரங்களை குறிப்பாக பனை மரங்களை பனை அபிவிருத்தி சபையுடன் இணைந்து அவற்றை பாதுகாப்பாக அகற்றும் அதேவேளை, வேறு இடங்களில் நடுகை செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

குறித்த வீதியில் அமையப்பெறவுள்ள 51 அடி நீளமான புதிய பாலமொன்றை அமைப்பது, ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு மூன்று அடி விட்டமுள்ள 25 மதகுகளை அமைப்பது மற்றும் தற்போதுள்ள பாலத்தை மீள்புனரமைப்புச் செய்வது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன.

வீதிப் புனரமைப்பின் போது வீதி அழகாகவும் செம்மையாகவும் அமைக்கப்படும் அதேவேளை, உல்லாசப் பயணிகளை கவரும் வகையில் பொழுதுபோக்கு மையங்களை அமைக்கும் வகையிலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் இதன்போது துறைசார்ந்தோரிடம் கேட்டுக்கொண்டார்.


இந்த கலந்துரையாடலில், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் திருமதி எழிலரசி அன்ரன் யோகநாயகம், வேலணை பிரதேச செயலாளர் திருமதி மஞ்சுளாதேவி சதீசன், வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர் சுதாகரன், ஊர்காவற்துறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன், வேலணை பிரதேச சபை தவிசாளர் சிவராசா (போல்), மாவட்ட கடற்றொழில் நீரியல்வள திணைக்களப் பணிப்பாளர் கணேசமூர்த்தி, குறித்த பிரதேச சபைகளின் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .