2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நிர்வாகத்தின் உறுதிமொழியினையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது

Menaka Mookandi   / 2014 மே 02 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களினால் இன்று வெள்ளிக்கிழமை (02) முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் பல்கலைக்கழக நிர்வாகத்திரால் வழங்கப்பட்ட உறுதிமொழியினையடுத்து முடிவுக்கு வந்தது.

பல்கலைக்கழக பதில் பிரதம பாதுகாப்பு அதிகாரி மீது கலைப்பீட மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தினையடுத்தே இந்த கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன், இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு குறித்த மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதாக பல்கலைக்கழக நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

இது பற்றித் தெரியவருவதாவது, 

யாழ். பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் துவிச்சக்கர வண்டிகள் அனைத்தும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களிடம் நுழைவுச் சீட்டு பெற்று உட்சென்று மீண்டும் திரும்பி வருகையில் அதனை ஒப்படைக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை (30) மாணவன் ஒருவனின்; துவிச்சக்கர வண்டியின் திறப்பு தவறவிடப்பட்ட நிலையில் அதன் பூட்டினை கலைப்பீட மாணவர்கள் உடைக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது, பதில் பிரதம பாதுகாப்பு உத்தியோகத்தரான வி.தூயகுமார் பூட்டு உடைப்பதினைத் தடுத்ததுடன், பாதுகாப்புக் காரியாலயத்தில் உரிய பதிவுகளைச் செய்து வண்டியை எடுத்துச்செல்லுமாறு கூறினார்.

இதன்போது குறித்த மாணவர்களினால் அந்த உத்தியோகஸ்தர் தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதல் சம்பவம் பல்கலைக்கழக பதிவாளர் முன்னிலையிலே இடம்பெற்றதாக பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

குறித்த மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கக்கோரியே பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .