2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

காணாமற்போன மாணவர்கள் அனுராதபுரத்தில் மீட்பு

Kogilavani   / 2014 ஜூன் 05 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகரத்தினம் கனகராஜ்

பாடசாலைக்கு சென்ற நிலையில்  காணாமற்போனதாக கூறப்படும் வவுனியா கனகராஜன்குளம் மகா வித்தியாலயத்தினைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் அனுராதபுரம் பகுதியில் இருந்து புதன்கிழமை (04) இரவு மீட்கப்பட்டதாக கனகராஜன் குள பொலிஸார் வியாழக்கிழமை (05) தெரிவித்தனர்.

கனகராஜன் பகுதியினைச் சேர்ந்த ஈ.சஞ்சய் (12), வி.நிரோஜன் (14) ஆகிய இரு மாணவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்படி மாணவர்கள் வழமைப்போன்று பாடசாலைக்கு புதன்கிழமை (04) காலை சென்றுள்ளனர். இவர்கள், மாலை வரையிலும் வீடு திரும்பாததினையடுத்து தமது பிள்ளைகளைக் காணவில்லையென பெற்றோர்கள் கனகராஜன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செயதனர்.

இந்நிலையில் அநுராதபுரம் நகர்ப்பகுதியில் இரண்டு சிறுவர்கள் நடமாடுவதினை அவதானித்த அநுராபுரம் பொலிஸார் இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர்.

இதன்போது குறித்த இரு சிறுவர்களும், 'தாங்கள் கனகராஜன் குளத்தினைச் சேர்ந்தவர்கள் எனவும், பாடசாலை முடிந்து வீதியில் நின்றிருந்தவேளை, டிப்பர் வாகனத்தில் வந்தவர்கள் உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்கின்றோம் எங்களுடன் வாருங்கள்' என்று அழைத்துச் சென்றதாகவும்  கூறினர்.

அதற்கிணங்க தாங்கள் வாகனத்தில் ஏறிச் சென்றதாகவும், பின்னர் அவர்கள் தங்களை மிரட்டும் தொனியில் கதைத்ததினால் அச்சமடைந்த தாம், அநுராதபுரம் பகுதியில் தேநீர்க்கடையில் டிப்பர் வாகனம் நிறுத்தப்பட்டு இறங்கும் போது, தப்பித்து வந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக அநுராதபுரம் பொலிஸார், கனகராஜன்குளம் பொலிஸாரிற்கு இது தொடர்பில் அறிவித்ததினையடுத்து, மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொலிஸார் அநுராதபுரத்திற்குச் சென்று குறித்த சிறுவர்களை அழைத்து வந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகப் கனகராஜன்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .