2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உங்கள் தேவைகளை உணர்ந்து பூர்த்தி செய்கிறோம்: கே.வி.குகேந்திரன்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 09 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


நீங்கள் கடந்த காலத்தில் சரியான முறையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியை அணுகாமைதான், இப்பகுதிக்கு உதவிகள் அதிகம் கிடைக்காமல் போனமைக்கு  காரணம். இதனால் தான், உங்களது தேவைகளை உணர்ந்து உங்கள் இடங்களுக்கு வந்து வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்து வருவதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட இணைப்பாளர் கே.வி.குகேந்திரன் தெரிவித்தார்.

இளவாலை வடக்கு – வடமேற்கு நாதோலை வளர்மதி சனசமூக நிலையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர்  மேலும் உரையாற்றுகையில்,

'நாங்களும் உங்களது சகோதரர்கள் தான். நீங்கள் உரிமையுடன் உங்கள் பிரச்சினைகளை தயங்காது எங்களிடம் கேளுங்கள். அமைச்சரின் (டக்ளஸ் தேவானந்தா) கரங்கள் உங்களை ஒளிமயமாக்குவதற்கே காத்திருக்கின்றன. மீள்குடியேறி வரும் இப்பகுதி மக்களை அரசியல் பகடைக்காய்களாக கையாள்கின்றனர் தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்கள்.

ஆனால், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் உங்களது மனோநிலைகளைப் புரிந்து துன்பத்துக்குள்ளாகியுள்ள உங்களின்; வாழ்வாதார தேவைகளை உடனடியாகக் கண்டறிந்து உதவிகளைச் செய்து வருகின்றோம்.

1990இல் அமைச்சரால் ஆரம்பிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார அபிவிருத்தி என்னும் கப்பலை அனைத்து இடர்களையும் தாண்டி இன்றுவரை வெற்றிகரமாக செலுத்திக் கொண்டிருக்கின்றோம். நாம் அரசுடன் பங்காளிக் கட்சியாக இருப்பதால் தான், இத்தனை அபிவிருத்திகளையும் செய்ய முடிகின்றது. இன்று தமிழ்த் தேசியம் பேசி மக்கள் வாக்குகளை  பெற்றவர்கள் நாம் செய்யும் அபிவிருத்திகளைக் கூட தடுத்து வருகின்றனர்.

உங்களுக்கு தேவையான அனைத்து வாழ்வாதாரத் தேவைகளையும் எம்மால் முடிந்தவரை மிக விரைவில் செய்து தருகின்றோம். உங்கள் பகுதியின் முக்கிய பிரச்சினையாகவுள்ள  நீர்ப்பிரச்சினைக்கு மிக விரைவில் அமைச்சரூடாக நடவடிக்கை எடுத்துத் தருகின்றேன்.

சுதந்திரமாக பேசுவதற்குரிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. இவ்வளவு காலமும் எந்தவொரு தீர்வுக்கான திட்டமும் இல்லாது அரசியல் நகர்வை செய்துவந்தவர்கள் இனி எதனை வைத்து அரசியல் செய்யப்போகின்றார்கள் என்றது தான் இன்றைய கேள்வி.

தமிழர்களது ஆயுதப் போராட்டமானது ஒரு தலைமையின் கீழ் தான் இருக்கவேண்டும் என்றிருந்த நிலை மறக்கமுடியாத வடுக்களுடன் முள்ளிவாய்க்காலுக்குள் முடிந்துவிட்டது.

எதிர்காலத்தில் உங்கள் தெரிவுகள்தான் அரசியல் நகர்வுகளை தெளிவாக, சரியான பாதையில் கொண்டு செல்லப் போகின்றன. எனவே நீங்கள்தான்  விழிப்புடன் செயல்பட வேண்டும்

தற்போது மக்களுக்கான வாழ்வாதார உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அமைச்சர் பிரதேச சபைகளுக்கு அரசிடமிருந்து நிதி பெற்றுக் கொடுக்கவுள்ளார். இந்தப் பகுதிக்கு பிரதேச சபையால் பாரபட்சமான முறையில் வழங்கப்படாதிருக்கும் சுயதொழில் வாய்ப்புகள், வீதிப்புனரமைப்பு, வீட்டுத்திட்டம், குடிநீர் வழங்கல், விவசாய உள்ளீடுகள், சமுர்த்தி உதவிகள் போன்ற உங்களுக்குத் தேவையான வாழ்வாதார உதவிகளை அனைத்தையும்  நீங்கள் தனிப்பட்ட ரீதியிலோ அல்லது குழுக்களாகவோ பெற்றுக்கொள்ள அமைச்சரூடாக  நடவடிக்கை எடுத்துத்தரப்படும் என  உறுதியளிக்கின்றேன்' என்றார்.

இக்கூட்டத்தில் வலி வடக்கு ஈ.பி.டி.பி பிரதேச சபை உறுப்பினர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அப்பகுதி மக்கள் ஆகியோர்  கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .