2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வரலாற்றை திரும்பி பாருங்கள் : டக்ளஸ்

Kanagaraj   / 2014 ஜூன் 14 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


எமது வரலாறுகளை மூடிமறைப்பது அல்லது மறந்து விடுவது பலருக்கு வாடிக்கையாக இருக்கலாம். ஒரு பொய்யை மீண்டும், மீண்டும் கூறும் போது அதுவே நாளடைவில் உண்மையாகிப் போகும் என்ற நிலைப்பாட்டிலும் பலர் இருந்து வருகின்ற சூழ்நிலையில் நாம் எமது உண்மையான வரலாறுகளை பின்னோக்கிப் பார்க்க வேண்டியுள்ளது என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக் கழகத்தின் விவசாய பீடத்தின் திறப்புவிழாவில்  சனிக்கிழமை (14) பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில்;

யாழ்.பல்கலைக் கழகமானது ஆரம்பத்தில் ஒரு வளாகமாக, பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களது ஆட்சிக்காலத்தில் கல்வி அமைச்சராக இருந்த அல்ஹாஜ் பதுயுதீன் மஹ்மூத் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டபோது அப்போதைய தமிழ் அரசியல் தலைமைகள் அதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

பல்கலைக் கழகமே வேண்டும் வளாகம் தேவையில்லை என அன்று அத்தலைமைகள் கூறி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. அந்த தலைமைகளின் எச்ச சொச்சங்கள் இன்றும் இருக்கின்றன.

அன்று கறுப்புக் கொடி காட்டிய தமிழ்த் தலைமைகளின் எதிர்ப்பையும் மீறி யாழ்ப்பாணத்தில் வளாகம் அமைக்கப்பட்டு இன்று அது பல்கலைக் கழகமாக பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது.

அன்றைய நாட்களில் அத் தலைமைகளின் எதிர்ப்புகளின் காரணமாக வளாகம் நிறுவப்படாது விட்டிருப்பின் இன்று இந்த பல்கலைக்கழகமே எமக்குக் கிடைத்திருக்காது.

இதேபோன்றுதான் இத்தலைமைகள் அரசியல் தீர்வு உட்பட அனைத்து விடயங்களையும் எதிர்ப்பதிலேயே தங்களது காலத்தை செலவிட்டு வருகின்றன.

கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்தவும் மேலும் சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வதற்கும் நாம் முன்வர வேண்டும்.
அனைத்தையும் எதிர்த்து, எதிர்த்தே இத் தமிழ் தலைமைகள் எமது மக்களை எதுவுமே அற்ற சமூகமாக பின்தங்கிய நிலைக்குக் கொண்டு வந்து விட்டன.

தங்களது சுயலாப அரசியலை முன்வைத்து மக்களது பிரச்சினைகளை தீர்க்க விடாமல் அப்பிரச்சினைகளை தீராப்பிரச்சினைகளாகக் காட்டி, அதன் மூலம் தங்களது அரசியல் இருப்பை இவர்கள் தக்க வைத்துக் கொள்ள முயல்கின்றனர்.

இவ்வாறான நிலைப்பாட்டிலிருந்து விடுபட்டு, எமது மக்களது பிரச்சினைகளை தேவைகளை உணர்ந்து அவற்றைத் தீர்ப்பதற்கு இவர்கள் முன்வருவதாக இல்லை.

இதனை எமது மக்கள் தெளிவாக உணர்ந்து, சரியான திசையை நோக்கிப் பயணிக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என அவர் மேலும் கூறினார்.

விவசாய பீட பீடாதிபதி திருமதி சிவச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், உயர்கல்வியமைச்சின் மேலதிகச் செயலாளர் ரனேபுர, யாழ்.பல்கலைக் கழக உபவேந்தர் வசந்தி அரசரட்ணம் ஆகியோர் உரைகளை நிகழ்த்தினர்.

இவ்விவசாய பீட வளாகத்தை மீள பல்கலைக்கழகப் பயன்பாட்டுக்கு பெற்றுத் தந்தமைக்காகவும், யாழ். பல்கலைக்கழகத்திற்கு பொறியியல் பீடமொன்றை உருவாக்கித் தந்தமைக்காகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அனைவரும் தங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இலங்கையில் 17 பல்கலைக் கழகங்கள் இருக்கும் நிலையில் நான்கு பொறியியல் பீடங்களும் மூன்று மருத்துவ பீடங்களும் இருப்பதாகத் தெரிவித்த உயர்கல்வியமைச்சர் எஸ்.பி திசாநாயக்க, பொறியியல் பீடமும், மருத்துவ பீடமும் அமைந்ததொரு பல்கலைக் கழகமாக யாழ். பல்கலைக் கழகம் இருப்பதாகவும் இது மென்மேலும் வளர்ச்சி பெறும் என்றும் காலப் போக்கில் கிளிநொச்சியிலும் ஒரு பல்கலைக் கழகம் உருவாகலாம் என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலர் திருமதி விஜயலக்ஷ்மி, ஆளுநரின் செயலாளர் திரு இளங்கோவன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, மாகாண சபை உறுப்பினர் தவநாதன், வாழ்நாள் பேராசிரியர் திரு பொன் பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், வடக்கு கிழக்கு கல்வியமைச்சின் முன்னாள் செயலாளர் திரு. டிவகலாலா, ஹாட்லிக் கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு. சிறிபதி உயர் கல்வி அமைச்சின் பணிப்பாளர் திரு அபோன்சு, 65ஆவது இராணுவ படையணியின் கட்டளைத் தளபதி ருபன டயஸ், பிரதி பொலிஸ் மா அதிபர் திசாநாயக்க உட்பட பல்கலை சார் சமூகத்தினர் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .